புக்கிட் மேராவில் உள்ள தற்காலிக வசிப்பிடங்களில் இருந்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது விடுதிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
ரெட்ஹில் குளோஸ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகளில் இருந்து கடைசித் தொகுதி ஊழியர்கள் இன்று கிளம்பினர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
"மூன்றாம் கட்டத் தளர்வுகள் நடப்பிற்கு வந்துவிட்ட நிலையில், நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஊழியர்களைத் தற்காலிக ரெட்ஹில் வீவக புளோக்குகளில் தங்க வைக்கவேண்டிய தேவை முடிவிற்கு வந்துவிட்டது," என்று என்டியுசி துணைத் தலைமைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மெல்வின் யோங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
துப்புரவு, பராமரிப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றி வந்த நல்ல உடல்நலத்துடன் கூடிய வெளிநாட்டு ஊழியர்கள் ரெட்ஹில் குளோசில் உள்ள 21 வீவக புளோக்குகளில் தங்க வைக்கப்பட்டனர்.
வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கொவிட்-19 பரவல் அதிகமாக இருந்ததை அடுத்து, அந்த ஊழியர்கள் வீவக புளோக்குகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான தற்காலிகத் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட, அரசாங்கத்திற்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத 36 இடங்களில் ரெட்ஹில் குளோசும் ஒன்று.
சாம்பியன்ஸ் வேயில் உள்ள இன்னோவா தொடக்கக் கல்லூரி, அப்பர் சிராங்கூன் சாலையில் உள்ள முன்னாள் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி, தெம்பனிஸ் அவென்யூ 9ல் உள்ள முன்னாள் தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரி உள்ளிட்ட 17 முன்னாள் பள்ளிகளும் அவற்றுள் அடங்கும்.
காலியாக இருந்த ஒன்பது தொழிற்சாலைகளும் என்எஸ்ஆர்சிசி கிராஞ்சியில் உள்ள கூடாரமும் அரசாங்கத்திற்குச் சொந்தமான மேலும் ஒன்பது இடங்களும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தற்காலிகத் தங்குமிடங்களாக மாற்றப்பட்டன.
ரெட்ஹில் குளோஸ் பகுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கி இருந்த வீவக புளோக்குகளை நிர்வகித்து வந்த அமைப்புகளிடம் பேசியதாக திரு யோங் சொன்னார்.
அங்கிருந்த வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தரவு இணைப்பு, பல்பொருள் அங்காடி, உள்ளேயே செயல்படும் மருந்தகம், முடிதிருத்துச் சேவைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் அந்த அமைப்புகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன.
வெளிநாட்டு ஊழியர்களை வரவேற்றதற்காக அக்கம்பக்கத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் ராடின் மாஸ் தனித்தொகுதி எம்.பி.யான திரு யோங்.
அத்துடன், அவ்விடங்களின் நிர்வாகப் பணிகளில் பங்கேற்ற ரெட்ஹில் அடித்தளத் தலைவர்களுக்கும் பல்வேறு அரசாங்க அமைப்புகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

