ராயல் கரீபியன் உல்லாசக் கப்பலில் கொவிட்-19 விதி மீறல்: விசாரணை நடக்கிறது

2 mins read
a11c85ab-3115-419e-86f6-c64ac0517703
அந்தக் கப்பலில் இருந்த 10க்கும் அதிகமான ஆடவர்களும் பெண்களும் டிசம்பர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவற்றில் சில படங்கள் அவர்களின் இன்ஸ்டகிராம் கணக்குகளில் பதிவேற்றப்பட்டன.  படங்கள்: VALLEYSEOW/INSTAGRAM -
multi-img1 of 2

ராயல் கரீபியன் உல்லாசக் கப்பலில் கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் மீறப்பட்டு இருக்கக்கூடும் என்பதால் அது பற்றி தான் ஆராய்ந்து வருவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.

அந்தக் கப்பலில் இருந்த 10க்கும் அதிகமான ஆடவர்களும் பெண்களும் டிசம்பர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவற்றில் சில படங்கள் அவர்களின் இன்ஸ்டகிராம் கணக்குகளில் பதிவேற்றப்பட்டன.

முகக்கவசம் அணியாமல், அருகருகே அவர்கள் இருந்தது படம் மூலம் தெரியவருகிறது.

கொவிட்-19 காரணமாக சிங்கப்பூர் கட்டம் கட்டமாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இரண்டாம் கட்ட தளர்வு நடப்பில் இருந்தபோது ஐந்து பேருக்கு மேல் யாரும் ஒன்றுகூடக் கூடாது என்ற கட்டுப்பாடு நடப்பில் இருந்தது. டிசம்பர் 28ல் நடப்புக்கு வந்த மூன்றாம் கட்டத் தளர்வையடுத்து இந்த எண்ணிக்கை எட்டாகக் கூட்டப்பட்டது.

கப்பலில் சிலர் ஒன்றாகச் சேர்ந்து படம் எடுத்தது பற்றி தனக்குத் தெரியும் என்றும் அது பற்றி கழகம் ஆராய்ந்து வருவதாகவும் பயணத்துறைக் கழகத்தின் உல்லாசக் கப்பல் துறை இயக்குநர் திருவாட்டி அனி சாங் கூறினார்.

"சிங்கப்பூரில் இருந்து புறப்படும் உல்லாசக் கப்பல்களில் பாதுகாப்பு நிபந்தனைகள் மீறப்பட்டால் அதைக் கடுமையான ஒன்றாகக் கழகம் கருதுகிறது.

"கப்பல் பயணிகள் மற்றும் சிப்பந்திகளின் பாதுகாப்பே முதன்மையானது. கப்பல்களில் முறையாகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன," என்றும் அந்த மாது விளக்கினார்.

இதனிடையே, அத்தகைய ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்பதை ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஒப்புக்கொண்டார். இது பற்றி நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்