புத்தாண்டு நீண்ட வாரயிறுதியை சிங்கப்பூரர்கள் உல்லாசத்துடன் கழிக்க அண்மையில் பெய்த தொடர் மழை தடையாக அமையவில்லை. கடைத்தொகுதிகள் பரபரப்பாகவும் சுற்றுலாத் தலங்களுக்கு வெளியே மக்களின் நீண்ட வரிசையும் காணப்பட்டன.
கடந்த மாதம் 28ஆம் தேதி மூன்றாம் கட்டத் தளர்வுகள் தொடங்கின. அதையடுத்து எட்டுப் பேர் வரை கொண்ட குழுக்களாக மக்கள் ஒன்றுகூட முடியும். மூன்றாம் கட்டத் தளர்வுகள் நடப்புக்கு வந்த முதல் வாரயிறுதியையும் புத்தாண்டு தினம் குறிக்கிறது.
இந்நிலையில், செந்தோசா தீவில் கூட்ட நிலவரத்தைக் காண ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு நேற்று முன்தினம் அங்கு சென்றது. மழையையும் பொருட்படுத்தாது 'யூனிவெர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூர்' போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் மக்கள் சென்ற வண்ணம் இருந்தனர்.
அங்கிருந்த உணவகங்களும் கூட்டம் நிறைந்து காணப்பட்டன. மக்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளி இருப்பதை உறுதிசெய்யும் தூதர்கள் அங்கு காணப்பட்டனர். கடந்த வாரயிறுதியில் பிரபலமான கடைத்தொகுதிகளுக்கும் உணவகங்களுக்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு சென்றது. வாடிக்கையாளர் கூட்டத்தை எதிர்பார்த்து பல்வேறு உணவகங்கள் கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகளை நடப்பிற்குக் கொண்டு வந்து இருந்தன.

