சிங்கப்பூரில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19; சாங்கி விமான நிலையத்தில் உள்ள கிரவுன் பிளாசா 2 வாரங்களுக்கு மூடல்

சிங்கப்பூரில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19; சாங்கி விமான நிலையத்தில் உள்ள கிரவுன் பிளாசா 2 வாரங்களுக்கு மூடல்

2 mins read
7bc9ec3c-e63e-4c1d-a902-a731006fc5d8
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 8) நண்பகல் நிலவரப்படி புதிதாக 23 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து இங்கு இதுவரை 58,836 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று உறுதி செய்யப்பட்டதில் 21 பேர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மற்ற இருவரும் உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்.

தங்கும் விடுதிகளில் யாருக்கும் கிருமித்தொற்று இல்லை.

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கிரவுன் பிளாசாவில் உள்ள அஸுர் உணவகத்தில் பணிபுரியும் மலேசியருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருக்கும் கிரவுன் பிளாசா இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. அஸுர் உணவத்தில் கிருமித்தொற்று கண்ட இரண்டாவது நபர் அவர்.

அந்த ஹோட்டலில் கிருமித்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 21ஆம் தேதி வரை அது மூடப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.

அந்த ஹோட்டலில் புதிய விருந்தினர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அங்கு தங்கியுள்ள வெளிநாட்டு விமானப் பணியாளர்கள் மற்றும் விருந்தினர்கள் படிப்படியாக அங்கிருந்து வெளியேற்றப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஹோட்டலுக்குள் இருக்கும் உணவகம், நிகழ்ச்சிக் கூடங்கள் போன்றவையும் மூடப்படுவதுடன் ஆழ்ந்த துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த ஹோட்டலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனை தொடங்கியுள்ளது.

அஸுர் உணவகத்தில் பணிபுரிந்த, கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டாவது நபர் 43 வயது மலேசியர். விமான சிப்பந்திகளுக்கும் ஹோட்டல் விருந்தினர்களுக்கும் உணவு பொட்டலமிடும் பணியில் ஈடுபட்டு வந்தார் அவர். நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரில் இந்தப் பெண்ணும் ஒருவர்.

ஆனால், உணவகத்தில் உணவருந்துவோருடன் இவருக்குத் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

டினாட்டா கார்கோ நிலையத்தில் உள்ள ஏர்மார்க் ஏவியேஷன் நிறுவனத்தில் பணிபுரியும் 63 வயது ஆடவர், நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டாவது நபர்.

விமானப் பயணிகளுடன் அவருக்குத் தொடர்பு இல்லை எனவும் மை இண்டோ ஏர்லைன்சில் பொருள்களை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபடுபவர் அவர் என்றும் அறியப்படுகிறது.

ஸ்ரீ செண்பக விநாயகர் கோயில், 2 தெம்பனிஸ் சென்ட்ரல் 6ல் உள்ள என்டியுசி இன்கம் பேரங்காடி போன்ற இடங்களுக்கு, கிருமித்தொற்று கண்டவர்கள் சென்று வந்ததாக அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்