சிங்கப்பூரிலிருந்து ஆட்களை பாத்தாம் தீவுக்கு அழைத்துச் சென்றவருக்கு சிறை, அபராதம்

சிங்கப்பூரிலிருந்து ஆட்களை பாத்தாம் தீவுக்கு அழைத்துச் சென்றவருக்கு சிறை, அபராதம்

1 mins read
fb49ca4e-b55f-4c1f-832a-bbabade6f790
-

கொவிட்-19 கொள்ளைநோய் காலகட்டத்தில் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளன.

இதனால் இந்தோனீசியாவில் வசிக்கும் தங்களின் குடும்பத்தாரைப் பார்க்க உதவ முடியுமா என்று தன் சகோதரரும் நண்பரும் கேட்டுக்கொண்டதற்கு 36 வயது அர்மான் மாமுட் சம்மதித்தார்.

சென்ற ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று, தன் நிறுவனத்திற்குச் சொந்தமான கலனில் இருவரையும் செயிண்ட் ஜான்ஸ் தீவு அருகே ஓட்டிச் சென்றார்.

இந்தோனீசியப் படகு ஒன்று வரும்வரை சிங்கப்பூரின் நீரிணையிலேயே அர்மான் காத்திருந்தார். கரையோரப் போலிசாரிடம் சிக்காமல் இருக்க, தன் கலனின் 'டிரான்ஸ்போண்டர்' சாதனத்தை அர்மான் செயலிழக்கச் செய்ததாகக் கூறப்பட்டது.

எதிர்பார்த்திருந்த படகு வந்ததும் உதவி கோரிய இரு ஆடவர்களும் அதில் குதித்து பாத்தாம் தீவுக்குப் பயணம் செய்தனர். நீரிணையில் அடையாளம் தெரியாத கலன் ஒன்று தென்பட்டதை அடுத்து கரையோர போலிசார் அர்மானைக் கைது செய்தனர்.

குடிநுழைவுச் சட்டம், சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையச் சட்டம் ஆகியவற்றின்கீழ் குற்றம் புரிந்ததற்காக நேற்று அர்மானுக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனையும் $6,000 அபராதமும் விதிக்கப்பட்டது. பணத்துக்காக இச்செயலை செய்யவில்லை என்றும் உதவுவதற்காகவே செய்ததாகவும் அர்மான் நீதிமன்றத்தில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்