'டிரேஸ்டுகெதர்' தரவு பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டம்

'டிரேஸ்டுகெதர்' தரவு பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டம்

1 mins read
8dc05035-86f2-41c1-abbf-d9712b1ce686
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'டிரேஸ்டுகெதர்' தரவுகள் போலிஸ் விசாரணைக்குத் தேவைப்படும் பட்சத்தில் கடுமையான குற்றங்களை விசாரிக்கவே அவை பயன்படுத்தப்படும் வகையில் அரசாங்கம் சட்டம் கொண்டு வர இருக்கிறது. பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், கொலை, ஆட்கடத்தல், பாலியல் பலாத்காரம் கடுமையான பாலியல் குற்றங்கள் போன்றவை உள் ளிட்ட ஏழு வகைக் குற்றங்களுக்கு மட்டுமே 'டிரேஸ்டுகெதர்' தரவுகளை பயன்படுத்தலாம் என சட்டம் கட்டுப்படுத்தும்.

அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடும்போது இதற்கான சட்டம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்க அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கொவிட்-19 கிருமிப் பரவல் முறியடிப்புக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்திய தடயம் அறியும் சாதனமான 'டிரேஸ்டுகெதர்' தரவுகளை ஒப்படைக்குமாறு குற்றவியல் நடைமுறை விதித்தொகுப்பு பிரிவு 20ன் கீழ் எவருக்கும் போலிஸ் உத்தரவிடலாம் என திங்கட் கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்சாதனம் மீதான அந்தரங்க விவகாரம் தொடர்பிலான அக்கறை எழுந்தது.

அதற்கு மறுநாள், அறிவார்ந்த தேச நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான விவியன் பாலகிருஷ்ணன் இது தொடர்பாக விளக்கினார். புலன் விசாரணையோடு சம்பந்தப்பட்ட நபர் மூலமாக மட்டுமே 'டிரேஸ்டுகெதர்' தரவுகளை போலிஸ் பெறமுடியும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தத் தரவுகள் மிகவும் கடுமையான குற்றங்களுக்கான விசாரணைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் மன்றத்தில் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்