சிங்கப்பூரில் உட்குரோவ் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் ஆங்கில மொழி, இலக்கியத் துறை தலைவரான 46 வயது மஸ்லிண்டா ஸைனால் தமது மாணவர்களிடமிருந்து $40,000க்கும் அதிகமான தொகையைக் கையாடியது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கற்றல் சாதனங்களுக்காக பணத்தை வசூலிக்கும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் வசூலிக்கப்பட வேண்டிய தொகையைவிட கூடுதல் பணத்தை அவர் தமது மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
2016ஆம் ஆண்டு $35,000 மற்றும் 2017ஆம் ஆண்டு $36,000 வசூலித்தார் மஸ்லிண்டா. ஆனால், பள்ளியில் புத்தகக் கடை நடத்தி வந்த செங் பீ லியன் என்பவரிடம் 2016ஆம் ஆண்டில் சுமார் $13,000 மற்றும் 2017ஆம் ஆண்டில் $17,000 ரொக்கத்தை அளித்தார். எஞ்சிய பணத்தை அவர் கையாடினார் என்று கூறப்பட்டது.
2002ஆம் ஆண்டில் பள்ளியில் சேர்ந்த அவர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு துறைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார். தற்போது பள்ளியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

