உள்துறைக் குழுவினர் 80 பேருக்குத் தடுப்பூசி

உள்துறைக் குழுவினர் 80 பேருக்குத் தடுப்பூசி

2 mins read
c2fa0bb6-8f79-4fc1-af87-91c885f19939
முன்களச் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட உள்துறைக் குழு அதிகாரிகள் 80 பேருக்கு உபியில் உள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தலைமையகத்தில் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. படம்: உள்துறை அமைச்சு -

முன்களச் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட உள்துறைக் குழு அதிகாரிகள் 80 பேருக்கு இன்று கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.

உள்துறை அமைச்சில் இடம்பெறும் தடுப்பூசி நடவடிக்கையின் தொடக்கமாக இது அமைந்தது. வரும் வாரங்களில் படிப்படியாக மொத்தம் 1,050 அதிகாரிகளுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

ஆறு வாரங்களுக்குள் அந்த நடவடிக்கை நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவச் சேவை அதிகாரிகள், உள்துறைக் குழு மருத்துவச் சேவைப் பிரிவுப் பணியாளர்கள், உள்துறைக் குழு அறிவியல், தொழில்நுட்ப முகவை மற்றும் சிங்கப்பூர் சிறைத்துறையின் முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்குத் தடுப்பூசி போடப்படும்.

முதற்கட்டமாக, தடுப்பூசி பெற உள்துறைக் குழுவைச் சேர்ந்த 1,123 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 94 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இணங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசி போடுவதற்கு முன்பாக, மருத்துவ ரீதியில் அவர்கள் அனைவரும் அதற்குத் தகுதியானவர்களா எனப் பரிசோதிக்கப்பட்டனர்.

மருத்துவரீதியாகப் பிரச்சினைகள் இருப்போருக்குத் தடுப்பூசி போடுமுன், அவர்கள் உள்துறைக் குழுவின் மருத்துவ அதிகாரிகளால் மறுஆய்விற்கு உட்படுத்தப்படுவர்.

இதற்கிடையே, பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை அறிவதற்காக, நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட அதிகாரிகள் அனைவரும் 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். மூன்று வாரங்களுக்குப் பிறகு அவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்படும்.

முதலாம் வாரண்ட் அதிகாரி முகம்மது ஷஃபீ ஜமின், 38, நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட உள்துறைக் குழுவின் சுகாதாரப் பராமரிப்பு முன்களப் பணியாளர்களில் முதலாமவர். காலாங் தீயணைப்பு நிலையத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவப் படையில் அவர் பணிபுரிகிறார்.

"குடிமைத் தற்காப்புப் படையின் முன்களப் பணியாளர் என்ற வகையில் நான் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் மூலம் என்னை மட்டுமின்றி, நோயாளிகளின், சக ஊழியர்களின், என் அன்பிற்கு உரியவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்," என்று திரு ஷஃபீ கூறினார்.

தம்மைப் போலவே குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவப் பிரிவில் இருக்கும் தம் மனைவியும் அடுத்த சில நாள்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்