சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான 'ஜிஐசி', உலக அளவில் மிகவும் துடிப்பான அரசாங்க முதலீட்டு நிறுவனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், அரசாங்கத்தின் மற்றொரு முதலீட்டு நிறுவனமான 'தெமாசெக் ஹோல்டிங்ஸ்' உலகின் தலைசிறந்த தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டு நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'குளோபல் எஸ்.டபிள்யூ.எஃப்' எனும் முதலீட்டு அமைப்பின் ஆய்வில் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனங்களுக்கு இந்த சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 'ஜிஐசி' நிறுவனம், 65 வெவ்வேறு உடன்பாடுகளின் மூலம் 17.7 பில்லியன் அமெரிக்க டாலரை (S$23.6 பில்லியன்) முதலீடு செய்து, பட்டியலின் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் கனடிய பொது ஓய்வூதிய நிதியான 'சி.பி.பி' நிறுவனம், 33 திட்டங்களில் US$15 பில்லியனை முதலீடு செய்தது.
கனடிய 'சி.டி.பி.க்யூ' நிதி நிறுவனமும் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் 'முபாடாலா' நிறுவனமும் முறையே மூன்றாம் நான்காம் இடங்களைப் பெற்றன.
கடந்த ஆண்டில் கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக அரசாங்க முதலீட்டு நிறுவனங்கள் குறைந்த அளவில்தான் முதலீடு செய்திருந்த நிலையிலும், அரசாங்க முதலீட்டு நிறுவனங்கள் 503 திட்டங்கள் மூலம் மொத்தம் US$162.3 பில்லியன் மதிப்புள்ள முதலீடுகளைச் செய்துள்ளன.
ஒப்புநோக்க 2019ஆம் ஆண்டில் அரசாங்க முதலீட்டு நிறுவனங்கள் மொத்தம் 499 திட்டங்கள் மூலம் US$199.4 பில்லியன் மதிப்புள்ள முதலீடுகளைச் செய்திருந்தன என்றது ஆய்வு.
சிங்கப்பூரின் தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த, குறிப்பாக மின் வர்த்தகம், உயிர் அறிவியல் போன்ற துறைகளில் US$2.3 பில்லியன் மதிப்புள்ள முதலீடுகளைச் செய்துள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் சிங்கப்பூரின் 'ஜிஐசி' நிறுவனம் தரவு மையங்கள், 'கிளவுட்' தொழில்நுட்பம் போன்ற துறைகளில் US$2.2 பில்லியன் மதிப்புள்ள முதலீடுகளைச் செய்தது.

