சிங்கப்பூரில் மேலும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் 2 சம்பவங்கள்

சிங்கப்பூரில் மேலும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் 2 சம்பவங்கள்

2 mins read
fef78c46-20f4-48cb-b92e-2eed4c581967
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 17) புதிதாக 30 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களையும் சேர்த்து இதுவரை கிருமி தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 59,113 ஆகக் கூடி இருக்கிறது.

புதிதாக கிருமி தொற்றியோரில் 28 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.

உள்ளூர் சமூகத்தில் இருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் எவரும் பாதிக்கப்படவில்லை.

இதனிடையே, சனிக்கிழமை கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியும் கே-9 யுனிட்டைச் சேர்ந்த துணை விலங்குநல மருத்துவரின் மனைவியும் அடங்குவர் என்றும் அமைச்சு குறிப்பிட்டு இருந்தது.

துணை விலங்குநல மருத்துவரின் மனைவியான 28 வயது சிங்கப்பூரர் சிங்கப்பூர் சிறைச்சாலை அதிகாரியாக வேலை பார்க்கிறார். ஆனால் அவர் கைதிகளுடன் தொடர்புகொள்ளவில்லை. அவர் பெரும்பாலும் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதாக அமைச்சு கூறினது. கணவருக்குக் கிருமித்தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவர் ஜனவரி 13ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

நேற்று கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 24 பேரில் 19 பேர் இந்தியா, மியன்மார், ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஃபிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

ஒருவர் துவாஸ் ஊழியர் தங்குவிடுதிவாசி. அந்த 37 வயது இந்திய ஆடவருக்கு தங்குவிடுதிகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான பரிசோதனைகளில் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

வேலை அனுமதி அட்டையுடன் இங்கு பணிபுரியும் அவர் செவரோன் ஓரோநைட் எனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

மற்றொருவர் பிஷானிலுள்ள சிங்கப்பூர் சாரணியர் சங்கத்தில் பணிபுரியும் 39 வயது ஆடவர். அவர் வெஸ்ட்பாயின்ட் டிரான்சிஸ்டில் பகுதிநேர பேருந்து ஓட்டுநராகவும் வேலை பார்க்கிறார். அவரது 39 வயது மனைவியும் பாதிக்கப்பட்டுள்ளார். தெம்பனிஸ் ஒன்னில் உள்ள ஓசிபிசி சென்டரில் அவர் பணிசெய்கிறார். எனினும் அவர் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதில்லை.

சமூகப் பாதிப்புக்குள்ளான நான்காமவர் வேலை அனுமதி அட்டையில் பணிபுரியும் 33 வயது சீன ஆடவர். கோல்டன் பிரிட்ஜ் பூட்ஸ் மெனுஃபேக்சரிங் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் அவருக்கு முதலில் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என ஜனவரி 8ஆம் தேதி உறுதியானது.

ஜனவரி 13ஆம் தேதி வேலைக்குத் திரும்பிய அவருக்கு அறிகுறிகள் மோசமடைந்தது. பின்னர் அவருக்கு தொற்று உறுதியானது.

சனிக்கிழமை 13 பேர் குணமடைந்தனர். அவர்களையும் சேர்த்து கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,769 ஆகியது.

மருத்துவமனையில் 54 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். யாரும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இல்லை. 216 பேர் சமூக வசதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் 29 பேர் மரணம் அடைந்துவிட்டார்கள். அந்தத் தொற்று இருந்தும் இதர காரணங்களால் மாண்டவர்கள் 15 பேர்.

குறிப்புச் சொற்கள்