'உள்ளூர் சமூகத்தில் தொற்று அதிகரிப்பு; கட்டுக்குள் வைக்க கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படலாம்'

'உள்ளூர் சமூகத்தில் தொற்று அதிகரிப்பு; கட்டுக்குள் வைக்க கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படலாம்'

2 mins read
1268162a-5281-46a2-a3ce-cee78c56613c
அமைச்சர் லாரன்ஸ் வோங். -

பல மாதங்களில் முதல் முறையாக உள்ளூர் சமூகத்தொற்று சற்று அதிகரித்துள்ள நிலையில், கொவிட்-19 கொள்ளைநோய் பரவலை கட்டுக்குள் வைத்திருக்க கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படலாம்.

அண்மைய நாள்களில் சமூகத்தில் மேலும் புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இதில் ஓர் உள்ளூர் தொற்றுக்குழுமம் போலிஸ் விலங்கு மருத்துவத் துணை ஊழியருடன் தொடர்புடையது என்று கொவிட்-19 அமைச்சர்கள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான லாரன்ஸ் வோங் கூறினார்.

"துரதிர்ஷ்டவசமாக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தபோதிலும் மருத்துவ சிகிச்சை பெறாத பல அண்மைய சம்பவங்களும் உள்ளன," என்று அவர் நேற்று இரவு தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

கல்வி அமைச்சருமான வோங், தொடர்புத் தடங்கள் கண்டறிவோர் சாத்தியமான அனைத்து தொடர்புகளையும் அடையாளம் காணவும், சாத்தியமான சம்பவங்களை தனிமைப்படுத்தி தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறினார்.

"அரசாங்கம் நிலைமையை கவனமாகக் கண்காணித்து வருகிறது. மேலும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய கூடுதல் நடவடிக்கைகள் அவசியமா என்று பரிசீலிக்கிறது," என்று அவர் கூறினார்.

சமூகத்தில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 10ஆக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் எட்டு சம்பவங்கள்.

எனினும், சமூகத்தில் தொடர்புகளற்ற தொற்றுகளின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் ஐந்தாக இருந்து கடந்த வாரத்தில் நான்காகக் குறைந்துள்ளது.

திங்கள்கிழமை இரவு, சுகாதார அமைச்சு 14 புதிய கொரோனா தொற்றுகளை உறுதிப்படுத்தியது, அவற்றில் இரண்டு சமூகத் தொற்றுகள். இதன்மூலம் இது சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றின் எண்ணிக்கை 59,127 ஆகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்