தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசு நிலத்தைப் பயன்படுத்திய தம்பதிக்கு $7,000 அபராதம்

2 mins read
d0572750-5efc-49d6-aa5b-27dd422fd964
அரசு நில அத்துமீறல்கள் சட்டத்தின்படி, தண்டிக்கப்பட்டவர்களில் முதலாமவர்கள் 62 வயது திரு டான் டெக் சியோங், அவரது மனைவியான 60 வயது திருவாட்டி சியா மீ போ என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான நிலத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்திய தம்பதிக்கு மொத்தமாக $7,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

சிலேத்தார், ஜாலான் தாரி ஸாப்பினில் உள்ள தங்கள் மூன்று மாடி பங்களாவுக்கு அருகிலுள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து 144.2 சதுர மீட்டர் நிலத்தைத் தங்கள் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2005ஆம் ஆண்டிலிருந்து காலியாக உள்ள அந்த பங்களாவின் வாயிற்கதவு, நுழைவாயிலுக்கு இட்டுச் செல்லும் சிறிய பாதை, இரண்டு எல்லைச் சுவர்கள், வீட்டில் தடுப்புச் சுவர் ஆகியவை அரசு நிலத்துக்குள் அமைக்கப்பட்டிருந்தன.

அந்த இடம் வீவகவின் ஐந்து அறை வீட்டின் அளவைவிட அதிகமானது. அவர்களின் நீச்சல் குளத்தின் ஒரு பகுதியும் அரசு நிலத்திற்குள் இருந்தது.

2013ஆம் ஆண்டில் வெள்ளம் காரணமாக அந்தப் பகுதியில் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளைப் பொதுப் பயனீட்டுக் கழகம் மேற்கொண்டபோதுதான், அரசு நிலத்தை தம்பதி பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அரசு நில அத்துமீறல்கள் சட்டத்தின்படி, தண்டிக்கப்பட்டவர்களில் முதலாமவர்கள் 62 வயது திரு டான் டெக் சியோங், அவரது மனைவியான 60 வயது திருவாட்டி சியா மீ போ என்பது குறிப்பிடத்தக்கது.

திரு டானுக்கு $4,000 அபராதமும் திருவாட்டி சியாவுக்கு $3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்தத் தம்பதி இந்த வீட்டை திரு டானின் தந்தைக்குப் பரிசாகக் கொடுப்பதற்காகக் கட்டினர். ஆனால், 2005ஆம் ஆண்டில் வீட்டு கட்டி முடிக்கப்பட்டவுடன் திரு டானின் தந்தை மரணமடைந்தார்.

திரு டானின் தாயார் அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்க மறுத்துவிட்டதால், அதிலிருந்து அவ்வீடு காலியாக இருந்தது.

அரசு அமைப்புகள் பல முறை நிலத்தைத் திரும்பக் கொடுக்கும்படி கேட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்