சிங்கப்பூரில் உள்ள சில பூங்காக்களில் கடந்த வார இறுதியில் 20 பெரிய குழுக்கள் பாதுகாப்பு இடைவெளி நடைமுறை விதிகளை மீறியதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க், சாங்கி கடற்கரை, ஃபோர்ட் கேனிங் பார்க், காலாங் ஆற்றோரப் பூங்கா, எஸ்பிளனேட் போர்ட் ஆகியவற்றில் இந்த விதிமீறல் காணப்பட்டதாக அமைச்சர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
விதிமீறியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பணியில் தேசிய பூங்காக் கழகம் ஈடுபடும் என்றார் அவர். சீனப் புத்தாண்டு கொண்டாட்ட காலம் நெருங்கு
வதால் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் பாதுகாப்பு இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்குமாறும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
"இந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூரர்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க உணவு, பானக் கடைகள், கடைத்தொகுதிகள், இதர பொது இடங்களில் அரசாங்க அமைப்புகள் அமலாக்க நடவடிக்கைகளை அதிகரிக்கும். பாதுகாப்பு இடைவெளி நடைமுறை விதிகளை மீறும் கடைக்காரர்களுக்கு எதிராகவும் தனிநபர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கையை அவை எடுக்கும்," என்றார் திருவாட்டி ஃபூ. அரசாங்க அமைப்புகளில் ஒன்றான தேசிய பூங்காக் கழகம் கடற்கரைகளிலும் பூங்காக்களிலும் சுற்றுக் காவலை அதிகப்படுத்தி உள்ளது இதற்கு உதாரணம்.
பொது இடங்களில் கூட்டத்தின் அளவைத் தெரிந்துகொள்ள https://safedistparks.nparks.gov.sg/ போன்ற இணையப்பக்கங்களை பொதுமக்கள் பார்த்து அறியலாம் என்றும் எல்லா நேரத்திலும் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். அண்மையில் உருவெடுத்த கிருமிப் பரவல் குழு மங்கள் அபாயத்தின் நினைவூட்டல் என்றும் அமைச்சர் கூறினார்.

