சரியாக நடமாட முடியாமல் சிரமங்களை எதிர்நோக்குவோர், முடியும் என்ற நம்பிக்கையுடன் பேருந்துகளில் ஏறி இறங்கி பயணம் செய்ய ஏதுவாக தற்காலிக ஜூரோங் பேருந்து சந்திப்பு நிலையத்தில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இரண்டு பகுதியாக நடக்கும் அந்தப் பயிற்சி பொதுமக்களுக்கு இலவசம். சமூக சேவை அமைப்புகளும் மருத்துவமனைகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்கள், நோயாளிகளுக்கு உதவலாம்.
பேருந்துகளின் உள்பகுதி எப்படி இருக்கும்; பேருந்து சந்திப்பு நிலையம் எப்படி அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை எல்லாம் அத்தகைய பயணிகளுக்குப் பயிற்சியாளர்கள் விளக்குவார்கள்.
டவர் டிரான்சிஸ்ட் சிங்கப்பூர் நிறுவனம் இந்தப் பயிற்சி செயல்திட்டத்தை இன்று (ஜனவரி 30) தொடங்கியது.
பொதுப்போக்குவரத்து என்பது எல்லாரையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டையொட்டி இதர பல செயல்திட்டங்களையும் இந்த நிறுவனம் இன்று தொடங்கியது.
ஜூரோங் கேட்வே ரோட்டில் ஜேகியூப் கட்டடத்தின் பக்கத்தில் அமைந்துள்ள இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் செயல்களில் மாணவர்களையும் உள்ளடக்க டவர் டிரான்சிஸ்ட் சிங்கப்பூர் திட்டமிடுகிறது. இந்த தற்காலிக பேருந்து நிலையத்தை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.
கைக்குழந்தைகள், சிறார்களுடன் வருவோருக்காக தாதிமை அறை, பயணிகள் இருக்கும் இடத்துக்கு ஊழியர்கள் வந்து உதவுவதைச் சாத்தியமாக்கும் குரல் அழைப்பு முறை உள்ளிட்ட பலவும் நிலையத்தில் இருக்கின்றன.
இந்த நிறுவன பேருந்துகளின் சேவை விவரங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வசதி இருக்கிறது.
இந்த நிலையத்தில் உள்ள 21 சில்லறை வர்த்தக இடங்களில் ஓர் இடம் சமூக நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் நடத்தும் உணவகத்தில் பொதுமக்கள் தேவை உள்ள குடும்பங்களுக்கு உணவு நன்கொடை வழங்கலாம்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று இந்தப் பேருந்து நிலையத்தைப் பார்வையிட்டார்.
முதியோர் அதிகம் வசிக்கின்ற ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் பல மருத்துவ நிலையங்கள் இருப்பதைச் சுட்டிய அமைச்சர், டவர் டிரான்சிஸ்ட் சிங்கப்பூர் நிறுவனத்தின் முயற்சிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு உதவுவதில் பெரும் பலன் தரும் என்றார்.