சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 31) நண்பகல் நிலவரப்படி புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
இன்று விடுதிகளில் புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரில், சாங்கி விமான நிலைய முனையம் 1ல் பரிசோதனை அதிகாரியாகப் பணிபுரியும் 72 வயது சிங்கப்பூரரும் ஒருவர்.
கடந்த திங்கட்கிழமை அவருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. அதே நாளில் அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகளும் தென்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆயினும், அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை.
வழக்கமான அட்டவணைப்படுத்தப்பட்ட பரிசோதனையை கடந்த புதன்கிழமை மேற்கொண்டபோது, அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை அவர் நேஷனல் செர்விஸ் ரிசோர்ட் & கண்ட்ரி கிளப்பில் வேறு 12 பேரை டென்னிஸ் விளையாடச் சென்றபோது சந்தித்தார்.
அந்தச் சமயத்தில் பாதுகாப்பு நடைமுறை விதிமீறல்கள் ஏதாவது இருந்ததா என்பதை சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில், அவருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதன் காரணமாக கொவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதை சுகாதார அமைச்சின் நேற்றைய அறிக்கை தெரிவித்தது.
தடுப்பூசி போட்டு சில வாரங்களுக்குப் பிறகுதான் நோயெதிர்ப்பாற்றல் உடலில் உருவாகும் என்பதையும் அமைச்சின் அறிக்கை தெளிவுபடுத்தியது.
நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டாமவர் ஈசூனில் உள்ள பிராட்வே கோப்பிக் கடையில் துப்புரவாளராகப் பணிபுரியும் 68 வயது நிரந்தரவாசி.
கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதும் அதற்கு அடுத்த நாள் அவர் வேலைக்குச் சென்றார். பலதுறை மருந்தகத்துக்கு சிகிச்சைக்குச் சென்றபோது அவருக்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது 69 வயது மனைவிதான் நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்றாவது நபர்.
ஜனவரி 23 முதலே கிருமித்தொற்று அறிகுறிகள் தோன்றியபோதும் அந்தப் பெண் சிகிச்சையை நாடவில்லை என்று தெரிகிறது.
வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்ட 55 பேருக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களையும் சேர்த்து இங்கு மொத்தம் 59,181 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 46 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெறுகிறார்கள்.
கொவிட்-19 நோயினால் இதுவரை மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களுக்காக மாண்டவர்கள் 15 பேர்.
உலக அளவில் இதுவரை 101.4 மில்லியன் மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2.1 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.