'வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை 367 பேர் மீறியுள்ளனர்'

'வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை 367 பேர் மீறியுள்ளனர்'

2 mins read
490ad9e9-f4ea-49cd-9be8-510b2f5bbbb4
படம்: சாவ் பாவ் -

கொவிட்-19 தொடர்பான வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை கடந்த மாதம் 25ஆம் தேதி வரை 367 பேரும் தனிமைப் படுத்தல் ஆணையை 130 பேரும் மீறியுள்ளனர் என்று உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனவரி 25ஆம் தேதி வரை மொத்தம் 308,442 வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவுகளும் 268,385 தனிமைப்படுத்தல் ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஃபைஷல், செங்காங் குழுத் தொகுதி உறுப்பினர் லுயிஸ் சுவா கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போது இந்த விவரங்களை வெளியிட்டார்.

வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவையும் தனிமைப்படுத்தல் ஆணையையும் மீறுவோர் தொற்றுநோய்கள் சட்டத்தின்படி, தண்டனையாக $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரையிலான சிறை அல்லது இரண்டும் பெறக்கூடும்.

விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக அரசாங்க அமைப்புகளும் 'நிர்வாக நடவடிக்கைகளை' எடுக்கக்கூடும் என்றும் அமைச்சர் சொன்னார்.

உதாரணத்துக்கு, வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை மீறிய நான்கு பேரின் வேலை அனுமதிச் சீட்டை மனிதவள அமைச்சு கடந்த ஆண்டு நவம்பரில் ரத்து செய்தது.

அத்துடன் அதே குற்றத்தைப் புரிந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியின் நிரந்தரவாசத் தகுதி ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் சிங்கப்பூர் திரும்புவதற்குத் தடை விதிக்கப்பட்டார் என்றும் டாக்டர் ஃபைஷல் சுட்டினார்.

"வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவையும் தனிமைப்படுத்தல் ஆணையையும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால மற்றும் குறுகியகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் ஆகியோர் முறையாகக் கடைப் பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க அவர்கள் தங்கள் உடலில் மின்னணுவியல் கண்காணிப்புக் கருவிகளை அணிந்துகொள்ள வேண்டும்.

அந்தக் கருவிகள் மூலம் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதற்கு அவர்கள் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்," என்றும் அமைச்சர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்