மிகக் கடுமையான குற்றங்கள் தொடர்பிலான புலனாய்வுக்கு மட்டுமே தனிப்பட்ட தொடர்பு தடமறிதல் தரவுகள் பயன்படுத்தப்படும் என்ற பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை உத்தேச சட்டம் கொண்டிருப்பதால் அதற்கு பாட்டாளிக் கட்சி ஆதரவளிக்கும் என்று அதன் தலைமைச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான திரு பிரித்தம் சிங் (படம்) நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (சட்டத்திருத்தம்) மசோதா மீதான விவாதத்தை நேற்று தொடங்கி வைத்து பேசிய திரு சிங், “குற்றவியல் நடைமுறை விதித் தொகுப்பின்படி குற்றவியல் புலனாய்வுக்கு எவ்வித தரவுகளையும் கோரலாம் என்ற அதிகாரத்தை இந்தப் புதிய திருத்தச் சட்டம் குறிப் பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது.
“மொத்தத்தில் சிங்கப்பூரரின் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் உரிமையை இந்தப் புதிய சட்டம் மேம்பட்ட முறையில் பாதுகாக்கிறது,” என்றார்.
தற்போது நாட்டின் முன்னுரிமையாக இருப்பது கொவிட்-19 கொள்ளைநோயைக் கட்டுக்குள் கொண்டு வருவது மற்றும் பொருளியலை மீட்சியடையச் செய்வது என்று குறிப்பிட்ட திரு சிங், கொள்ளைநோய் தொற்றியவர்களின் தொடர்பு தடமறிதலுக்குத்தான் டிரேஸ்டுகெதர் தரவுகள் பயன்பட வேண்டுமே தவிர, குற்றவியல் புலனாய்வுக்கு அது ஏன் பயன்படுத்தப்பட வேண்டும். அதற்குதான் போலிஸ் படையிடம் கண்காணிப்பு கேமரா பதிவுகள், கைபேசிகளையும் மடிக்கணினிகளையும் சோதனையிடுதல், குற்றம் நடந்த இடத்தில் தடயவியல் சோதனைகளை நடத்துதல் போன்ற மற்ற வழிகள் உள்ளனவே என்று கேள்வி எழுப்பினார்.
கொவிட்-19 தொடர்பு தடமறிதலுக்குத்தான் தரவுகள் பயன்படுத்தப்படும் என்று முன்னதாக அறிவித்த அரசாங்கம் கடந்த மாதம் அது குற்றவியல் புலனாய்வுக்கும் பயன்படுத்தப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து மக்களிடையே அதிருப்தி, குறைகூறல், கவலை போன்றவை தலையெடுத்தன என்று அவர் விளக்கினார்.
தொடர்பு தடமறிலுக்கு டிரேஸ்டுகெதர் தரவுகள் முக்கியமானது என்றாலும் கடுமையான ஏழு குற்றங்களின் புலனாய்வுக்கு அந்தத் தரவுகளின் பயன்பாடும் முக்கியம் என்று அரசாங்கம் கூறுவதையும் மறுப்பதற்கில்லை என்றும் அவர் சொன்னார்.
ஆனால், டிரேஸ்டுகெதர் தரவுகள் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையும் மக்களின் ஒத்துழைப்பும் சற்று குறைந்திருப்பதால், அதை மீண்டும் பெற திரு சிங் சில யோசனைகளை முன்வைத்தார்.
“மக்களின் தனிப்பட்ட தரவுகள் எப்படி மிகக் முக்கியமான காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, அதன் நம்பகத்தன்மை என்ன, தரவுப் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது என்பதை மக்களுக்கு ஒளிவுமறைவின்றித் தெரிவிக்க வேண்டும்.
“தரவுகளைப் பெறுவதிலும் பயன்படுத்துவதிலும் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய அவற்றைக் கண்காணிக்கும் ஒரு சுயேச்சையான அதிகாரி ஒருவரை அரசாங்கம் நியமிக்க வேண்டும்,” என்றும் திரு பிரித்தம் சிங் தெரிவித்தார்.