'டுவெல்வ் கப்கேக்ஸ்' நிறுவனத்தின் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக் கொடுக்கப்பட்டது தொடர்பான குற்றங்களை முன்னாள் விளம்பர அழகி ஜெமி டியோ சாய்-லின், 43, ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரரான டியோ, 'டுவெல்வ் கப்கேக்ஸ்' நிறுவனம் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கியதைத் தடுக்கத் தவறிய 10 குற்றங்களை ஒப்புக்கொண்டார். அவருக்கு பிப்ரவரி 25ஆம் தேதி தண்டனை வழங்கப்படும்.
அப்போது இத்தகைய 14 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்படும்.
டியோ தனது கணவரும் முன்னாள் வானொலி நிகழ்ச்சி படைப்பாளருமான 45 வயது டேனியல் ஓங் மிங் யூவுடன் 2011இல் இந்த நிறுவனத்தை நிறுவினார்.
இது கொல்கத்தாவை தளமாகக் கொண்ட துன்சேரி குழுமத்திற்கு 2016ஆம் ஆண்டில் $2.5 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
நிறுவனம் இவர்களது உரிமையின் கீழ் இருந்த ஆண்டுகளிலிருந்து, $98,900 சம்பளம் நிலுவையில் உள்ளது என்று நீதிமன்றம் அறிந்தது.
அதன் தற்போதைய உரிமையாளர்களின் கீழ், 'டுவெல்வ் கப்கேக்ஸ்' நிறுவனத்துக்கு ஜனவரி 12ஆம் தேதி $119,500 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி, 2017, 2018ஆம் ஆண்டுகளில் இந்நிறுவனம் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கிய 15 குற்றச்சாட்டுகள் நிரூபனமானது. வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றமாகும்.



