கைதிலிருந்து தப்பிக்க எண்ணி அதிகாரியைத் தள்ளிவிட்ட ஆடவர்

கைதிலிருந்து தப்பிக்க எண்ணி அதிகாரியைத் தள்ளிவிட்ட ஆடவர்

2 mins read
d2065261-15f3-4a83-a9c1-dd8012a5b5e7
-

தாம் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முகம்மது நபிலா யூசோஃப் எனும் 29 வயது சிங்கப்பூர் ஆடவர், தமது மோட்டார்சைக்கிள் தலைக்கவசத்தைக் கொண்டு மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரி ஒருவரைத் தள்ளிவிட்டார். இதனால் அந்த அதிகாரியின் வலது இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அரசாங்க ஊழியர் ஒருவருக்கு கடுமையான காயம் விளைவித்த குற்றத்தை நபிலா இன்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு மே மாதம் உட்லண்ட்சில் உள்ள கார் நிறுத்துமிடம் ஒன்றில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறுவதன் சந்தேகத்தின் பேரில் கறுப்பு நிற கார் ஒன்றை மேற்கூறப்பட்ட அதிகாரி உட்பட ஐந்து அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது அந்த காரை நோக்கி நபிலா செல்வதை அவர்கள் கவனித்தனர்.

நபிலாவை அதிகாரிகள் அணுகியபோது அவர் உடனே காரில் ஏறி தப்பிக்க முற்பட்டார். அவர் தப்பித்துவிடாமல் இருக்க அதிகாரிகளில் இருவர் தங்கள் வாகனத்தைச் செலுத்தி நபிலாவை வழிமறித்தனர். இருப்பினும், நபிலா எப்படியாவது தப்பிக்க முயன்றார்.

"குற்றஞ்சாட்டப்பட்டவர் திடீரென கார் சன்னல் வழியாக வெளியே குதித்தார். மோட்டார்சைக்கிள் தலைக்கவசத்தைக் கொண்டு அதிகாரியை அவர் தள்ளிவிட்டார்," என்று அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞர் ஹீர்ஷன் கோர் கூறினார்.

இதனால் அந்த அதிகாரி ஒரு மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் தமது வலது தொடைப்பகுதியில் அவருக்கு கடும் வலி ஏற்பட்டது.

இந்த நிலையிலும் நபிலாவை அந்த அதிகாரி தப்பிக்கவிடவில்லை. இருவருக்கும் இடையே போராட்டம் நிகழ, வேறு மூன்று அதிகாரிகள் நபிலாவை மடக்கிப் பிடித்து அவரைக் கைது செய்தனர்.

காயமடைந்த அந்த அதிகாரி கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு 54 நாட்கள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது.

அடுத்த மாதம் 31ஆம் தேதி நபிலாவுக்கு தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்