தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெம்பனிசில் கத்திக்குத்து காயமடைந்த பெண் மரணம்; தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட பொங்கோல் ஆடவரும் உயிரிழப்பு

2 mins read
4a3530ce-6f3e-41e0-b9c6-47d796bfbdfc
தெம்பனிஸ் ஸ்திரீட் 21ல் உள்ள புளோக் 206, பொங்கோல் ஃபீல்டில் உள்ள புளோக் 205A ஆகிய இடங்களில் இருவரும் அசைவின்றி கிடந்தாகக் கூறப்பட்டது. படங்கள்: SCREENGRAB FROM GOOGLE MAPS -

தெம்பனிசில் இன்று (பிப்ரவரி 10) அதிகாலை வேளையில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் தொடர்புடைய ஆணும் பெண்ணும் உயிரிழந்தனர்.

தெம்பனிஸ் ஸ்திரீட் 21ல் உள்ள புளோக் 206ல் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் தொடர்பில் இன்று காலை 6.30 மணியளவில் போலிசுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அந்த புளோக்கின் வெற்றுத் தளத்தில் 42 வயது மாது ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் அசைவின்றி கிடந்தார்.

அந்தச் சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் 45 வயது ஆடவர் பொங்கோல் ஃபீல்டில் உள்ள புளோக் 205Aல் உள்ள அவரது வீட்டின் கீழே காலை 9.10 மணியளவில் அசைவின்றிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருவருக்கொருவர் தெரிந்த அவ்விருவரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைகளில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

அதிகாரபூர்வ ஆவணம் ஒன்றும் உயிரிழந்த மாதுவின் புகைப்படங்களும் சமூக ஊடகங்களிலும் குறுஞ்செய்தித் தளங்களிலும் பரவின.

பொங்கோல் ஃபீல்டு புளோக்கில் காணப்பட்ட அந்த ஆடவரின் புகைப்படம், பிறந்த தேதி, தாயகம், பெயர் போன்றவற்றைக் குறிப்பிட்டு, அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி போலிஸ் புகார் எண்ணும் அந்த ஆவணத்தில் இருந்தது.

இணையத்தில் வலம் வந்த புகைப்படம் ஒன்றில் அந்த மாது ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் ஒரு கறுப்பு நிற கைப்பை மற்றும் இளஞ்சிவப்பு வண்ண உறையுடன் இருந்த கைபேசியையும் காண முடிந்தது.

அந்த புகைப்படங்களையும் ஆவணத்தையும் பரப்ப வேண்டாம் என பொதுமக்களை போலிசார் கேட்டுக்கொண்டனர்.

இயற்கைக்கு மாறான அந்த மரணங்கள் பற்றிய விசாரணையைத் தொடரும் போலிசார், அந்த புகைப்படங்கள், ஆவணங்களை அனுமதியின்றி பரப்புவோரையும் கண்காணித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்