சிங்கப்பூரில் நேற்று ஊழியர் தங்குவிடுதிவாசி ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
22 வயது கட்டுமான ஊழியரான அவர் பிடோக் சவுத் ரோட்டில் இருக்கும் ஊழியர் தங்குவிடுதியில் வசிப்பவர்.
அந்த ஊழியருக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவருக்கு தொற்று இல்லை எனத் தெரிந்தது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 'சீராலஜி' பரிசோதனை முடிவுகளிலிருந்து அவருக்கு தொற்று முன்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டாலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பங்ளாதேஷைச் சேர்ந்த அந்த ஊழியருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான கொவிட்-19 குழும பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனை உறுதி செய்வதற்காக செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று பதிவானது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்ற 14 பேரும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், இருவர் நிரந்தரவாசிகள், ஒருவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டையில் இங்கு வந்தவர், எண்மர் வேலை அனுமதி அட்டையுடன் இங்கு வந்தவர்கள் மற்றும் இருவர் குறுகியகால வருகை அனுமதி உடையவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் இதுவரை 59,511 பேர் கொவிட்-19லிருந்து விடுபட்டு முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினர்.
36 பேர் மருத்துவமனைகளிலும் 156 பேர் சமூகப் பராமரிப்பு நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொவிட்-19 நோயினால் இதுவரை மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களால் மாண்டவர்கள் 15 பேர்.
உலக அளவில் இதுவரை 106 மில்லியன் மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2.3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

