வரவுசெலவுத் திட்டம் 2021: வேலை ஆதரவுத் திட்டம் மேலும் 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும்

வரவுசெலவுத் திட்டம் 2021: வேலை ஆதரவுத் திட்டம் மேலும் 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும்

2 mins read
607d5684-7c37-44af-894e-bcf6f6781042
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நிறுவனங்கள் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்காமல் தக்கவைத்துக்கொள்ள உதவும் நோக்கில் வேலை ஆதரவுத் திட்டத்தை (JSS) அரசாங்கம் கடந்தாண்டு வரவுசெலவு திட்டத்தில் அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ், ஊழியரின் மாதச் சம்பளத்தின் ஒரு பங்கினை அரசாங்கம் வழங்குகிறது.

கொவிட்-19 கிருமித்தொற்றினால் தொடர்ந்து அதிகம் பாதிப்படைந்து வரும் வர்த்தகங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதிய நிதி உதவி இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று துணை பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.

விமானத் துறை, விண்வெளித் துறை, சுற்றுப்பயண துறைகளில் கொடுக்கப்படும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான சம்பளங்களில் 10லிருந்து 30 விழுக்காடு வரையிலான அரசாங்க நிதி உதவி தொகை வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட உணவு சேவைகள், சில்லறை வர்த்தகம், கடல், கலைகள், கேளிக்கை துறைகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் 10 விழுக்காடு ஊதிய நிதி உதவி கிடைக்கும்.

இதற்காக அரசாங்கம் 700 மில்லியன் ஒதுக்கும் என்றும் வெவ்வேறு துறைகளின் முன்னுரைக்கப்பட்ட மீட்புக் காலத்தை பொருத்து இத்தொகை மாறக்கூடும் என்றும் துணை பிரதமர் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் கூறினார்.

"நமது பொருளாதாரம் படிபடியாக மீண்டு வருகையில், சில துறைகள் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றன, வேறு சில சிரமத்தை எதிர்கொள்கின்றன. மீட்பு முயற்சிகளை நிலை நாட்டவும் வளர்ந்து வரும் துறைகளுக்கு ஆதரவு வழங்கவும் ஆதரவுகளை அதன்படி மாற்றியமைப்போம்," என்று குறிப்பிட்டார் திரு ஹெங்.

இதுவரையில் $25 பில்லியன் வேலை ஆதரவுத் திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் 17 மாதங்கள் வரையில் 150,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதன் வழி பயன்பெற்றுள்ளனர் என்றும் அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்