தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கழிவுத் தொட்டியில் சிசுவை வீசிச் சென்ற சிங்கப்பூர் தம்பதிக்கு எதிராக தைவானில் கைதாணை

2 mins read
ee5b63aa-c32e-4bb6-9999-b7ab56f0ef14
அந்தத் தம்பதி குற்றமிழைத்ததற்குத் தங்களிடம் போதுமான சான்று இருப்பதாக தைவான் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் பேச்சாளர் சென் ஜூ பிங் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' இதழிடம் தெரிவித்தார். படம்: SCREENGRABS FROM YOUTUBE -

ஈராண்டுகளுக்குமுன் தைவானில் உணவுக் கழிவுத் தொட்டியில் அப்போதுதான் பிறந்த பெண் குழந்தையின் உடலை வீசிச் சென்ற சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூர் தம்பதிக்கு எதிராக தைவானிய அதிகாரிகள் கைதாணை பிறப்பித்துள்ளனர்.

அந்தத் தம்பதி குற்றமிழைத்ததற்குத் தங்களிடம் போதுமான சான்று இருப்பதாக தைவான் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் பேச்சாளர் சென் ஜூ பிங் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' இதழிடம் தெரிவித்தார்.

குழந்தையைக் கொன்றுவிட்டு, உடலை அப்புறப்படுத்தியது உட்பட பல குற்றங்களைச் செய்திருக்கலாம் என அத்தம்பதி மீது சந்தேகிக்கப்படுகிறது.

விடுமுறையைக் கழிக்க தன் காதலனுடன் தைவான் சென்றிருந்த அப்பெண், கடந்த 2019 பிப்ரவரி 26ஆம் தேதி ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பின்னர் அவர்கள் அக்குழந்தையின் உடலை ஸிமெண்டிங்கில் உள்ள ஓர் உணவகத்தில் இருந்த உணவுக் கழிவுத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதன்பின், அந்த உணவுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அங்குள்ள ஒரு மறுசுழற்சி ஆலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்குதான் அக்குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தைவானிய அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டனர். நூற்றுக்கு மேற்பட்ட கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளின் துணையுடனும் குடிநுழைவுப் பதிவுகளைக் கொண்டும், அத்தம்பதியை அதிகாரிகள் மோப்பம் பிடித்தனர்.

குழந்தையை வீசிய அதே நாளின் பிற்பகலிலேயே அத்தம்பதி ஹோட்டலைக் காலி செய்துவிட்டு, சிங்கப்பூருக்குப் பறந்தது தெரியவந்தது.

அக்குழந்தை உயிருடன் பிறந்ததைத் தடயவியல் ஆய்வு முடிவுகள் காட்டின.

சிங்கப்பூர்-தைவான் இடையே நாடுகடத்தல் உடன்பாடு இல்லை என்பதால் அத்தம்பதி மீண்டும் தைவானுக்கு வந்தால் மட்டுமே அவர்களைக் கைது செய்ய முடியும் என்று திருவாட்டி சென் குறிப்பிட்டார்.

ஈராண்டுகளுக்குமுன் தொடர்புகொண்டபோது, தங்களுக்கும் அச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று அத்தம்பதி மறுத்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

ஆயினும், இப்போது 26 வயதாகும் அப்பெண்ணையும் அவரது 25 வயதுக் காதலனையும் அச்சம்பவத்திற்குப் பின் பார்க்க முடிவதில்லை எனக் கூறப்படுகிறது.

அதேவேளையில், தங்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அந்த ஆடவர் சமூக ஊடகம் வழியாக அறிவித்திருந்தார்.

பெண்ணின் முகவரிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு 50 வயதுகளில் இருந்த ஆடவர் ஒருவர் ஊடகத்திடம் பேச மறுத்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.

அதேபோல, அந்த ஆடவரின் முகவரிக்குச் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவரைப் பார்த்து வெகுநாளாகிவிட்டதாகவும் ஆயினும் சீனப் புத்தாண்டுக்குச் சில நாள்களுக்குமுன் அவரின் தந்தையைக் கண்டதாகவும் அண்டைவீட்டார் கூறினர்.

குறிப்புச் சொற்கள்