மியன்மார் நிலவரம் குறித்து தாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளசிங்கப்பூரும் இந்தோனீசியாவும் மியன்மார் நிலவரம் குறித்து விவாதிக்க முறைசாரா ஆசியான் அமைச்சர்நிலை கூட்டம் நடத்தப்படுவதற்கான பரிந்துரைக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்டிருக்கும் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரட்னோ மர்சுடியும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் நேற்றுச் சந்தித்து மியன்மார் நிலவரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
"மியன்மார் நிவலரம் தங்களுக்குக் கவலையளிப்பதாகவும் அந்தநாட்டிலுள்ள எல்லாத் தரப்பினரும் கலந்து பேசி, அனைவருக்கும் உகந்த அமைதியான தீர்மானத்துக்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்," என்று அமைச்சின் அறிக்கை கூறியது.
"நாட்டில் அமைதி திரும்ப உடனடி முயற்சி எடுக்கப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அப்பாவி மக்களிடம் வன்முறையுடன் நடந்துகொள்வதையும் அவர்கள் மீது உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்," என்று டாக்டர் விவியன் கேட்டுக்கொண்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை டாக்டர் விவியன் நாடாளுமன்றத்தில் மியன்மார் விவகாரத்தில் சிங்கப்பூரின் நிலைப்பாடு குறித்து பேசினார்.
சிங்கப்பூரில் தம்மை வரவேற்ற டாக்டர் விவியனுக்கு தமது டுவிட்டர் மூலம் நன்றி கூறிய திருவாட்டி ரட்னோ, "அமைச்சர் விவியனும் நானும் ஆசியான் தலைவர் கூட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் பற்றியும் மியன்மார் உட்பட இதர ஆசியான் விவகாரங்கள் பற்றியும் பேசினோம்," என்று குறிப்பிட்டிருந்தார்.
நேற்றைய கூட்டத்தில் இரு வெளியுறவு அமைச்சர்களும் தங்கள் நாடுகளுக்கிடையிலான அற்புதமான இருதரப்பு உறவை மறுவுறுதிப்படுத்திக்கொண்டனர்.
கொவிட்-19 விளைவித்துள்ள சவால்கள் உட்பட மேலும் பல திட்டங்களில் கூடுதல் ஒத்துழைப்பைத் தொடர அவர்கள் கடப்பாடு தெரிவித்தனர். நேற்று முன்தினம் சிங்கப்பூருக்கு வந்த திருவாட்டி ரட்னோ, நேற்று நாடு திரும்பினார்.