வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 14 பேருக்கு கொவிட்-19

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 14 பேருக்கு கொவிட்-19

1 mins read
ea570be4-c31b-4076-8649-a718bbb36a1a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 19) புதிதாக 14 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

இவர்களுடன் சேர்த்து கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,846க்கு அதிகரித்துள்ளது.

உள்ளூர் சமூகத்திலோ, தங்குவிடுதிகளிலோ புதிய கிருமித்தொற்று இல்லை என்றும் சுகாதார அமைச்சின் அறிக்கை கூறியது.

நேற்று கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 11 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

அவர்களில், இத்தாலியிலிருந்து மாணவர் அனுமதி அட்டையில் இங்கு வந்த 31 வயது பெண்ணைத் தவிர மற்றவர்களுக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்படவில்லை.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் 63 வயது சிங்கப்பூர் மாது; ஒருவர் பங்ளாதேஷிலிருந்து வந்த நிரந்தரவாசி.மற்ற எண்மரும் வேலை அனுமதி அட்டையுடன் இங்கு வந்தவர்கள்.

நேற்றைய நிலவரப்படி, 59,664 பேர் கொவிட்-19லிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் ஒருவர் உட்பட, தற்போது 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதர 104 பேர் சமூக வசதிகளில் தங்கி குணமடைந்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் கிருமித் தொற்று காரணமாக 29 பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்