மெதுவோட்டம் ஓடும்போது தனது சகோதரி இசையைக் கேட்க அவரது காதுகளில் செவிப்பொறி அணிந்திருக்கவில்லை என்றால் மரம் முறிந்து விழுவதை அவர் கேட்டு அங்கிருந்து விலகிச் சென்றிருப்பார் என்றார் 44 வயது திருவாட்டி ஜிலியன் லோக்.
மார்சிலிங் பூங்காவில் நேற்று மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஜிலியனின் இளைய சகோதரியான 38 வயது லோக் சியாவ் லியின் மீது ஒரு மரம் விழுந்ததில் அவர் அந்த இடத்திலேயே மரணமுற்றார்.
மரம் விழுந்த வேகத்தில் சேதமுற்ற குமாரி லோக் அணிந்திருந்த காதுகேள் பொறிகளில் ஒன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் காண்பிக்கப்பட்டது. குமாரி லோக், தனது பெற்றோர் சகோதரருடன் அந்த வீட்டில் வசிந்து வந்தார்.
மீடியாகார்ப் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக வேலை செய்து வந்த தனது சகோதரி, அடிக்கடி நீண்டநேர வேலைக்குப் பிறகு வீடு திரும்புவார் என்று கண்ணீர் மல்கக் கூறினார் ஜிலியன்.
தமது சகோதரி வேலைக்குத் தனது மோட்டார் சைக்கிளில் சென்று வருவார் என்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது அவருக்கு அலாதி பிரியம் என்றும் கூறினார்.
விபத்து குறித்து நேற்று முற்பகல் 11 மணிக்கு தங்களுக்கு போலிஸ் மூலம் தகவல் கிடைத்தது என்றும் தங்கள் குடும்பத்தினர் மார்சிலிங் பூங்காவுக்குச் சென்று சேருவதற்குள் லோக்கின் உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் ஜிலியன் கூறினார்.