கொவிட்-19 தடுப்பூசி போடும் ஊழியர்கள் பொறுப்பை நிறைவேற்றிய பிறகே அவ்விடத்தைவிட்டு அகலவேண்டும்: அமைச்சர் ஜனில்

கொவிட்-19 தடுப்பூசி போடும் ஊழியர்கள் பொறுப்பை நிறைவேற்றிய பிறகே அவ்விடத்தைவிட்டு அகலவேண்டும்: அமைச்சர் ஜனில்

2 mins read
19498901-1c7f-49f1-a231-eaf4bdb457c7
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தடுப்பூசியைப் போடும் செயல்முறையில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், தங்களின் உடனடிப் பொறுப்பை நிறைவேற்றிய பின்னரே அவ்விடத்திலிருந்து அகல வேண்டும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி இன்று (பிப்ரவரி 24) நாடாளுமன்றத்தில் கூறினார்.

சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு, ஒன்றுக்குப் பதிலாக 5 மடங்கு ஃபைசர்-பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசி தவறுதலாக போடப்பட்ட சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தடுப்பூசியைச் செலுத்தும் ஊழியர்கள், மருத்துவ ரீதியாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

அப்படியே, அவ்விடத்தை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் எழுந்தால், முறையான ஆவணப்படுத்தலும் பொறுப்பை மற்றொருவரிடம் ஒப்படைத்தலும் நடக்க வேண்டும் என்றார் டாக்டர் ஜனில். மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு டாக்டர் ஜனில் இவ்வாறு பதிலளித்தார்.

தேசிய தடுப்பூசித் திட்டம் தொடங்கி ஒரே வாரத்தில் இவ்வாறு தடுப்பூசி அளவு தவறுதலாக ஜனவரி 14ஆம் தேதியன்று செலுத்தப்பட்ட சம்பவம், மீண்டும் நிகழாமல் இருக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டிருந்தனர்.

அச்சம்பவத்தில், தடுப்பூசியைக் கையாண்டுகொண்டிருந்த ஊழியர், வேறு விவகாரத்திற்காக அவ்விடத்திலிருந்து செல்ல, இரண்டாவது ஊழியர் அங்கிருந்த தடுப்பூசி அளவு செலுத்துவதற்கான தயார்நிலையில் இருப்பதாகத் தவறாக எண்ணிவிட்டார். தடுப்பூசியின் 5 மடங்கு 'டோஸ்' அளவைப் பெற்ற அந்த ஊழியருக்கு எவ்விதப் பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

தேசிய தடுப்பூசி செயல்முறையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் உள்ள வேலைப்பளு, சமாளிக்கக்கூடிய அளவில் இருப்பதாக டாக்டர் ஜனில் உறுதியளித்தார். தடுப்பூசி வளாகங்களிலேயே பதிவு செய்வது, சோதனையிடுவது, தடுப்பூசி போடுவது, கண்காணிப்பது ஆகிய குறிப்பிட்ட மையங்களில் அவர்களுக்குத் தெளிவான பொறுப்புகள் தரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசியைத் தயார்செய்வது, அதைச் செலுத்துவது ஆகியவற்றின் தொடர்பில் தெளிவான, கைப்பட எழுதப்பட்ட வழிமுறைகளை கொவிட்-19 தடுப்பூசி வழங்குநர்கள் பின்பற்ற வேண்டும். இந்த வழிமுறைகளை நன்கறிந்துகொள்வதற்காக பயிற்சிகளும் அளிக்கப்படுவதாக டாக்டர் ஜனில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்