இல்லப் பணிப்பெண்ணை இறைச்சி அரைக்கும் இயந்திரத்தைக் கொண்டு தானாக வாயில் அடித்துக்கொள்ள சொல்லித் துன்புறுத்திய மாதுக்கு இன்று (மார்ச் 16) 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்தபோது 41 வயது மன் சாவ் யேங் மனச்சோர்வு, 'ஓசிடி' எனப்படும் கட்டுப்படுத்த இயலாத கட்டாய மனப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பணிப்பெண்ணைத் துன்புறுத்திய குற்றச்சாட்டு உட்பட மூன்று குற்றச்சாட்டுகளை அந்த இல்லத்தரசி ஒப்புக்கொண்டார்.
2018 ஏப்ரலில் வேலைக்குச் சேர்ந்த அப்பணிப்பெண், மன்னின் தீவிர சுத்தம் செய்யும் பாணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று கூறப்பட்டது.
பணிப்பெண் ஒருநாள் மதிய உணவுக்காக 'சார்டின்' சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதைக் கண்டு கோபத்தில் மன் அவரைக் கன்னத்தில் குத்தினார். பின்னர் பணிப்பெண்ணுக்குப் பாடம் புகட்டும் வகையில் அவரைத் தானாகவே 50 முறை கன்னத்தில் குத்திக்கொள்ளச் சொன்னார்.
2019 பிப்ரவரி 4ஆம் தேதி சமையலறை சன்னலில் விரல்ரேகை பதிந்திருந்ததால் பணிப்பெண்ணின் பல் விழும் வரை இறைச்சி அரைக்கும் இயந்திரத்தை வைத்து சொந்தமாக வாயிலேயே அடித்துக்கொள்ளும்படி மன் கட்டாயப்படுத்தினார்.
பணிப்பெண்ணின் பல் விழாதபோது மன் அவரை வாயில் அடித்துப் பல்லை விழச் செய்தார்.
ஒரு வாரம் கழித்து இல்லப் பணிப்பெண்களுக்கான நிலையத்தைத் தொலைபேசி மூலம் அழைத்து அப்பணிப்பெண் நடந்ததைக் கூறினார். பின்னர் அந்நிலையம் போலிசிடம் புகார் செய்தது.

