சில ஆண்டு காலமாக தமது 68 வயது தாயை பலமுறை வேண்டுமென்றே தாக்கிய குற்றத்தை 30 வயது ஆடவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். என்டி கோ ஜு ஹுவா எனப்படும் அவர் குற்றங்களில் ஈடுபட்டபோது பட்டமேற்படிப்பு மாணவராக இருந்தார்.
2017ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஒரே வீட்டில் தம்முடன் தங்கி இருந்த தமது தாயை ஆடவர் துன்புறுத்தியது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று காணொளி வழியாக நடத்தப்பட்டது. முகத்தில் குத்தியது, முழங்காலால் அந்தரங்க உறுப்பில் உதைத்தது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை கோ ஒப்புக்கொண்டார்.
தாம் மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறிக்கொண்ட அந்த ஆடவர், படிப்பில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தமது தாயை பட்டினி போட்டதாகவும் தாக்கியதாகவும் கூறினார். குளிக்கவோ வீட்டில் சத்தம் போடவோ அந்த மூதாட்டியை அவர் அனுமதிக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆக மோசமான சம்பவம் 2018 டிசம்பரில் நிகழ்ந்தது. உலோகத் தாழ்ப்பாளை மூதாட்டியின் அந்தரங்கப் பகுதியை நோக்கிப் பலமுறை கோ வீசினார்.
மேலும், தமது தாயின் வாயில் மூன்று முறை அவர் குத்தியது போலிஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
துன்புறுத்தல்கள் காரணமாக அடைக்கலம் நாடி பலமுறை வீட்டிலிருந்து வெளியேறிய அந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டும் இருந்தார். இருப்பினும் மறுபடியும் அவர் தமது வீட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
தமது பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும் என்று கருதி அந்த மூதாட்டி தொடக்கத்தில் போலிசை நாடவில்லை.
இந்த வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கோவுக்கு 30 வார சிறைத் தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

