அதிகாரிகளிடம் முறையாக தெரியப்படுத்தாமல் மூன்று ஆண்டு காலகட்டத்தில் $800,000க்கும் அதிகமான ரொக்கத்தை சிங்கப்பூருக்குக் கொண்டு வந்த 52 வயது மாதுக்கு நேற்று $18,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ரெஜினா பேகம் ஷேக் நூர்டின் எனும் அந்த சிங்கப்பூரர், 2015 டிசம்பருக்கும் 2018 டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளிடம் முறையாக தெரியப்படுத்தாமல் சிங்கப்பூருக்குள் அவர் பலமுறை ரொக்கத்தைக் கொண்டு வந்ததாகவும் சிங்கப்பூரிலிருந்து ரொக்கத்தை எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது.
ரெஜினாவின் நடவடிக்கைகள் குறித்து கடந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி தனக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.
தனிநபர்கள் $20,000க்கும் அதிகமான ரொக்கத்துடன் சிங்கப்பூர் எல்லைகளைக் கடக்கும்போது அது குறித்து அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவது சட்டப்படி கட்டாயமாகும்.
அனுமதிக்கப்படும் அளவுக்கும் அதிகமான தொகையை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் கொண்டு வருவோருக்கு $50,000 வரை அபராதமோ மூன்றாண்டு வரை சிறைத் தண்டனையோ, அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

