கொரோனா தொற்று காரணமாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள சுற்றுப்பயணத் துறையை மேம்படுத்தும் நோக்கில் நான்கு புதிய சுற்றுலாத் தலங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றுள், கிளார்க் கீயில் சிலிர்ப்பூட்டும் 'ஸ்லிங்ஷாட்' எனும் சாகச விளையாட்டும் டெம்ப்சி வட்டாரத்தில் அமையவுள்ள ஐஸ்கிரீம் அருங்காட்சியகமும் இவ்வாண்டிறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்.
செந்தோசாவில் அமையவுள்ள 'ஸ்கைஹெலிக்ஸ்' அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும். சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையைப் பார்வையிட உதவும் விதத்தில் தரையிலிருந்து 35 மீட்டர் உயரத்துக்கு பார்வையாளர்களைக் கொண்டு செல்லக்கூடிய சுழலும் தோணியாக அது இருக்கும். செந்தோசாவின் கேபிள் கார் நிலையத்துக்கு அருகில் இது அமையும்.
சாமர்செட் ஸ்கேட் பார்க், கில்லினி ரோடு ஆகியவற்றுக்கு இடையில் உள்ள காலி இடத்தில் மற்றொரு புதிய சுற்றுலாத் தலமும் நிறுவப்படும் என்று கூறப்படுகிறது. கிறிஸ்மசை முன்னிட்டு அங்கு புதிய அலங்காரங்களுக்குத் திட்டமிடப்படுகிறது.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த வருடாந்திர நிகழ்வான சுற்றுப்பயணத் தொழில்துறை மாநாட்டில் இன்று (ஏப்ரல் 7) இந்த அறிவிப்புகள் இடம்பெற்றன.

