விவேக்: சிங்கப்பூரில் தமிழ் செழித்தோங்கும்

விவேக்: சிங்கப்பூரில் தமிழ் செழித்தோங்கும்

3 mins read
4acf2249-b0c2-4bb4-a6b9-65a3d1fa6fc7
2018ஆம் ஆண்டில் தமிழ்மொழி விழாவையொட்டி ஈசூன் தொடக்கக் கல்லூரியில் நடைபெற்ற புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி, இலக்கிய கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய நடிகர் விவேக் (நடுவில்), மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். படம்: ரியல் ஐ கிரியேஷன்ஸ் சிங்கப்பூர் -

தமிழ் மொழிக்கு உரிய மண்ணான தமிழ் நாட்டிலேயே ஆங்கிலம் கற்றவர்களிடையே தமிழ் புழக்கம் குறைந்து காணப்பட்டு வரும் தருணத்தில், அந்த மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிங்கப்பூரில் தமிழ் மொழி செழித்தோங்குவது தமக்கு பெருமிதம் தருவதாக மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கூறியிருந்தார்.

"சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கிய உடனேயே அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றான தமிழ்மொழிச் சொற்கள் காணப்படுவது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த ஓர் உணர்வைத் தருகிறது," என்று அவர் சொல்லியிருந்தார்.

2018ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு யீசூன் தொடக்கக் கல்லூரியில் நடைபெற்ற புகுமுக வகுப்பு மாணவர்களுக்கான வருடாந்திர தமிழ்மொழி, இலக்கியக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்ற அப்போது இங்கு வந்திருந்த விவேக், தமிழ் முரசுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூருக்கும் இங்கு வாழும் தமிழர்களின் தமிழ்ப் புழக்கத்திற்கும் எப்போதும் சிறந்த எதிர்காலம் உள்ளது எனத் தாம் உறுதியுடன் நம்புவதாக குறிப்பிட்டிருந்த அவர், உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியைச் சிங்கப்பூர்வாழ் தமிழர்கள் நேசிப்பதைத் தாம் கண்கூடாக காண முடிவதாகக் கூறியிருந்தார்.

இன்றைய சூழலில் ஒரு நடிகருக்கு இருக்க வேண்டிய சமுதாய பொறுப்புணர்வு குறித்து விவேக் வெளிப்படையாகப் பேசினார். திரைப்பட நடிகர்கள் மக்களின் உணர்வுகளோடு நேரடியாக தொடர்பு கொண்டிருப்பதால் அவர்களிடம் சரியான சமுதாய கருத்துகளைக் கொண்டு சேர்ப்பதில் நடிகர்களுக்கு முக்கிய பங்குண்டு என்றார் அவர்.

"தொலைக்காட்சி, கைபேசி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் கலைஞர்களான நாங்கள் வீடுகளுக்கே சென்று மக்களை மகிழ்விக்கிறோம். அவர்களைச் சிரிக்க, சிந்திக்க, ரசிக்க வைக்க நல்ல கருத்துகளுடன் சில வேளைகளில் அறியாமல் தவறான கருத்துகளைக் கூறி விடுகிறோம்," என்று விவேக் சொன்னார்.

"ரசிகர் பெருமக்களால்தான் நடிகர்களான நாங்கள் உயர்ந்தோம். அப்படி இருக்கையில், மக்களுக்கு கஷ்டம் ஏற்படும்போது நாங்கள் எப்படி கண்டுகொள்ளாமல் இருப்பது?" எனக் கேள்வி எழுப்பிய அவர், சமுதாய விவகாரங்களுக்கு நடிகர்கள் குரல்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நகைச்சுவை நடிகர்களுக்குரிய தனிச்சிறப்புகளைப் பற்றியும் விவேக் விளக்கினார். எப்படி பிள்ளைகளுக்கு இனிப்புக்குள்ளே மருந்தைத் திணித்துக் கொடுப்பார்களோ, அதேபோல ரசிகர்களைச் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கும் திறனும் வாய்ப்பும் நகைச்சுவை நடிகர்களுக்கு இருப்பதாக அவர் சொன்னார்.

வாழ்வில் வெற்றியடைய திறமை, உழைப்பு போன்றவற்றுடன் அதிர்ஷ்டமும் தொட்டுச் செல்வது அவசியம் என்ற கருத்தையும் நடிகர் விவேக் பதிவு செய்தார். இதற்கு அண்மைய திரையுலக நிகழ்வுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

"பல ஆண்டுகளாக ரசிகர் கூட்டத்தைத் தங்கள் கைவசம் இழுக்க போராடிக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் திரைப்படத் துறையில் நுழைந்த விஜய் சேதுபதி, தமக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

"நகைச்சுவை நடிகராக சினிமாவுக்குள் நுழைந்த சிவகார்த்திகேயன், இன்று ஏராளமான ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார்," என்ற விவேக், வளர்ந்துவரும் நடிகர்கள் தங்களுக்கென ரசிகர் பட்டாளத்தைப் பெருக்க அவர்களது நடிப்பில் திறமையும் உழைப்பும் அடங்கியிருந்தாலும் கூட ஏதோ விவரிக்க முடியாத தாரக மந்திரம் அவர்களை உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகக் கூறினார்.

இத்துடன், மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரான ஏ.பி.ஜே. அப்துல் கலாமை தாம் முன்மாதிரியாக கருதும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான விவேக், அவரின் கோரிக்கைக்கு இணங்கி ஏராளமான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

(இந்தச் செய்தி 2018 ஏப்ரல் 22ஆம் தேதி வெளிவந்த தமிழ் முரசு அச்சுப் பிரதியில் இடம்பெற்றது)

குறிப்புச் சொற்கள்