தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் முதலாளியை மொத்தம் 94 முறை கத்தியால் குத்திய இந்தோனீசியப் பணிப்பெண்ணுக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தில் 28 வயது டர்யாத்தி என்ற அந்த பணிப்பெண், 59 வயது திருவாட்டி சியாவ் கிம் சூவை அவரது தெலுக் குராவ் வீட்டில் கத்தியால் குத்தினார்.
முன்னதாக தனக்கு இருந்த மனநலப் பிரச்சினையால் கொலை செய்ததாக டர்யாத்தியின் தற்காப்பு வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதையடுத்து, இரண்டாவது முறையாக விசாரணை நடைபெற்று டர்யாத்தி குற்றவாளி என்று தற்பொழுது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதியன்று திருவாட்டி சியாவ் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வேண்டுமென்றே தாக்கிய குற்றச்சாட்டை முன்னதாக டர்யாத்தி எதிர்நோக்கினார். அக்குற்றத்திற்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.
இருப்பினும், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 23க்கும் சென்ற ஆண்டு மார்ச் 4க்கும் இடைப்பட்ட காலத்தில் டர்யாத்தியின் வழக்கு விசாரணை நடைபெற்றபோது, குற்றச்சாட்டைத் தண்டனைச் சட்டப்பிரிவு 300 (c) கீழான கொலை என்று அரசுத்தரப்பு குறைத்துக்கொண்டது. அதற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். ஆனால், தாங்கள் மரண தண்டனை கோரப் போவதில்லை என்று அரசுத்தரப்பு கூறிவிட்டது.
டர்யாத்தி குற்றவாளி என்று தீர்ப்பானதை அடுத்து, டர்யாத்தி தன் மனதை மாற்றிக்கொண்டார். மனநலம் தொடர்பில் தான் கொலை செய்ய நேர்ந்ததாக தற்காப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்தது.
விடாது மனச்சோர்வுக் கோளாறுக்கு ஆளான டர்யாத்தி, திருவாட்டி சியாவைக் கொன்றதாக டாக்டர் டோமி டான் நிபுணத்துவ சாட்சியம் அளித்தார். இருப்பினும், டாக்டர் சானின் ஆதாரம் விசாரணைக்குப் போதுமானதாக இல்லை என்றும் சம்பவத்தின்போது செயலாற்றும் ஆற்றலை டர்யாத்தி இழந்ததாக தெரியவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
திருவாட்டி சியாவ் மீது தாக்குதல் நடத்த, வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் டர்யாத்தி ஆயுதங்களை மறைத்து வைத்ததை அவர் உதாரணம் காட்டினார்.
2016ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று டர்யாத்தி தனது பணிப்பெண் வேலையைத் தொடங்கியதாகவும் நன்கு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இருப்பினும், ஹாங்காங்கில் இல்லப் பணியாளராக வேலை பார்த்த தன் காதலரை எண்ணி ஏங்கியதாகவும் தனது கடப்பிதழோடு திருவாட்டி சியாவிடமிருந்து பணம் திருடி இந்தோனீசியாவுக்குத் திரும்பி சொந்த வியாபாரம் தொடங்கத் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது.

