அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் சனிக்கிழமை காலை நேரத்தில் நிகழ்ந்த ஒரு விபத்தை அடுத்து 10 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அந்த விபத்தில் ஒரு லாரி சம்பந்தப்பட்டு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் உள்ள 'தி ரயில் மால்' அருகே விபத்து நிகழ்ந்துள்ளதாக காலை ஏறக்குறைய 7.20 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் 35 வயது வாகன ஓட்டுநரையும் 26 முதல் 50 வரை வயதுள்ள ஒன்பது பயணிகளையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் என்றும் போலிஸ் கூறியது.
அவர்கள் 10 பேரும் சுயநினைவுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. எல்லாரும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்த விபத்தைக் காட்டும் படங்கள் இணையத்தில் இடம்பெற்றன.
சாலையின் ஒரு பக்கத்தில் லாரி கவிழ்ந்து கிடந்ததைப் படங்கள் காட்டின. வாகனத்திற்கு அருகே பலரும் அமர்ந்து இருந்ததும் படங்கள் மூலம் தெரியவந்தது.
இந்த விபத்து பற்றிய புலன்விசாரணை தொடர்வதாக போலிஸ் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரி தீவு விரைவுச் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு வாகனத்தின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.
மாண்டவர்களில் ஒருவர் பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர். மற்றொருவர் இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் துறை ஊழியர்.
இந்த விபத்து தொடர்பில் வாகன ஓட்டுநர் ஒருவர் கைதாகி இருக்கிறார்.
இந்த நிலையில், நான்கு நாட்களில் அடுத்த விபத்து நிகழ்ந்து உள்ளது.
'தி ரயில் மால்' அருகே சனிக் கிழமை காலை 7.20 மணிக்கு விபத்து நிகழ்ந்த தாக தங்களுக்கு தகவல் கிடைத்தது என்று போலிஸ் கூறியது.
படம்: சாவ் பாவ்

