முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோரின் மெடிசேவ் கணக்குகளில் மொத்தம் $278 மில்லியன் மதிப்பிலான தொகை நிரப்பப்படும்.
இம்மாத இறுதிக்குள் அவர்களுக்கு கடிதம் வழி இதுகுறித்து தெரியப்படுத்தப்படும் என்றும் ஜூலையில் அவர்களது மெடிசேவ் கணக்குகளில் பணம் நிரப்பப்படும் என்றும் நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் இன்று (ஜூன் 21) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த மூத்தோர் $250க்கும் $900க்கும் இடைப்பட்ட தொகையைப் பெறுவர். இவ்வாண்டு 82 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர், தங்களுக்கு ஏற்கெனவே கடுமையான மருத்துவப் பிரச்சினை இருந்தால் கூடுதல் நிரப்புதொகையாக இவ்வாண்டு முதல் 2025 வரை ஆண்டிற்கு $50 முதல் $200 வரை பெறுவர். அவர்களது மெடிஷீல்ட் லைஃப் காப்புறுதித் திட்டத்திற்கான சந்தாவைச் செலுத்த இது உதவும்.
இவ்வாண்டு முன்னோடித் தலைமுறையினருக்கான மெடிசேவ் நிரப்புதொகை ஏறக்குறைய $182 மில்லியன் மதிப்பிலானது.
மெர்டேக்கா தலைமுறையினர் ஒவ்வொருவரும் $200 பெறுவர். இவ்வாண்டு அவர்களுக்கான நிரப்புதொகையின் மதிப்பு ஏறத்தாழ $96 மில்லியன்.
மூத்தோருக்கான இந்தத் தொகுப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த ஏறக்குறைய 450,000 பேரும் மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த 500,000 பேரும் பலனடைந்துள்ளதாக அமைச்சுகள் தெரிவித்துள்ளன.
65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு-மெடிசேவ் நிரப்புதொகைக்கு மேலாக மூத்தோர், மெர்டேக்கா தலைமுறையினருக்கு மேற்கூறப்பட்ட நிரப்புதொகை வழங்கப்படும்.
65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஏறத்தாழ 575,000 சிங்கப்பூரர்கள் தங்களது மெடிசேவ் கணக்குகளில் $450 வரையிலான தொகையை ஜூலை 30ஆம் தேதியிலிருந்து பெறுவர்.