சிங்கப்பூரில் புதிதாக 1,457 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு புதன்கிழமை (செப்டம்பர் 22) இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி 1,426 பேருக்குத் தொற்று உறுதியாகி இருந்ததே ஆக அதிக ஒருநாள் கொவிட்-19 பாதிப்பாக இதுவரை இருந்தது. இதற்கிடையே, கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக 50 வயது ஆடவர் உட்பட மூன்று சிங்கப்பூரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அந்த 50 வயது ஆடவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அவருக்கு மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாக தெரியவில்லை. இங்கு கொவிட்-19 காரணமாக உயிரிழந்த ஆக இளையவர் ஆவார். இரண்டாமவர், 65 வயது ஆடவர். புதன்கிழமை அவர் உயிரிழந்தார். இம்மாதம் 1ஆம் தேதி அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அவருக்கு நீரிழிவு நோய், இறுதிக்கட்ட சிறுநீரகச் செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன.
மூன்றாமவர், 90 வயது மாது. அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இம்மாதம் 13ஆம் தேதி அவருக்குத் தொற்று உறுதியானது. அவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர். அவருக்குப் பக்கவாதம், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு ஆகிய மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன. அவருக்கு இருந்த நோய்களுடன் வயது முதிர்ச்சியும் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட காரணமாக இருந்தது என்று அமைச்சு கூறியது.
கடந்த இரு மாதங்களில் மட்டும் கொவிட்-19 தொற்று காரணமாக 31 பேர் உயிரிழந்துவிட்டனர். பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து சிங்கப்பூரில் இதுவரை பதிவாகியுள்ள மொத்தம் 68 மரணங்களில் இது கிட்டத்தட்ட பாதி அளவாகும். உள்ளூரில் புதன்கிழமை (செப்டம்பர் 22) கிருமித்தொற்றுக்கு ஆளான அந்த 1,457 பேரில் சமூக அளவில் 1,277 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 176 பேரும் அடங்குவர். எஞ்சிய நால்வர், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
கொவிட்-19 கிருமியுடன் வாழும் நிலையை நோக்கி சிங்கப்பூர் செல்லும் வேளையில், பெரிய கிருமித்தொற்று அலையை நாடு எதிர்கொள்ளும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் தற்போது 1,083 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தின நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 1,109ஆக இருந்தது. 145 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. நேற்று முன்தின நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 147ஆக இருந்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 19 பேர் உள்ளனர். நேற்று முன்தின நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 17ஆக இருந்தது.

