பயனியர் வட்டாரத்தில் உள்ள வேலையிடம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை கொள்கலன் விழுந்து நசுக்கியதில் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இவ்வாண்டு வேலையிடங்களில் இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆகியுள்ளது.
சென்ற ஆண்டு முழுமைக்கும் வேலையிட மரணங்கள் இதே எண்ணிக்கையில் இருந்ததாக ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளருமான திரு மெல்வின் யோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
இவ்வாண்டு வேலையிடங்களில் உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் கட்டுமானத் துறையையும் எட்டுப் பேர் தளவாடப் போக்குவரத்துத் துறையையும் சேர்ந்தவர்கள் என்று திரு யோங் கூறினார். இது, இவ்வாண்டு மொத்த எண்ணிக்கையில் பாதிக்குமேல் என்று அவர் சுட்டினார்.
வேலையிட விபத்துகளில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல், வெறும் புள்ளிவிவரம் அல்ல என்று திரு யோங் கூறினார்.
"அவர்கள் அன்புக்குரியவர்களை, தங்களை நம்பியிருக்கும் குடும்பத்தினரை, விடையளிக்கப்பட வேண்டிய கேள்விகளை பின்னால் விட்டுச் செல்கின்றனர்.
துவாஸ் வட்டாரத்தில் உள்ள ஸ்டார்ஸ் எஞ்சினியரிங் தொழிற்சாலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெடிப்பு ஏற்பட்டு வெளிநாட்டு ஊழியர்கள் மூன்று பேர் மரணமுற்ற சம்பவம் பற்றியும் பொது விசாரணை பற்றியும் திரு யோங் குறிப்பிட்டார்.
அபாய அறிகுறிகளைக் கண்டுகொள்ளாதது, சாதனங்களை முறையாகப் பயன்படுத்தாதது போன்ற கவலைக்குரிய பழக்கங்கள் அதில் தெரியவந்ததாக அவர் கூறினார்.
பொது விசாரணை முடிவுகளிலிருந்து பாடம் கற்று, நிறுவனங்கள் அபாய அறிகுறிகளைப் புறக்கணிக்காமல், உயிரிழப்பு அல்லது மோசமான விபத்து ஏற்படும் முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் என்று தாம் நம்புவதாக திரு யோங் குறிப்பிட்டார்.

