தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) கிழக்குக் கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கு ரொட்டி வெட்டும் கத்தியை (bread knife) எடுத்துச் சென்றார். பின்னர் அவரது நண்பர் ஒருவர் பள்ளி வளாகத்தில் கத்தியைப் பயன்படுத்தி வேறொரு மாணவரைக் குத்தினார்.
கத்தியை எடுத்துச் சென்ற 18 வயது இளையர் தமது நண்பருக்கு உதவியை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 25) ஒப்புக்கொண்டார்.
அவ்விரு இளையர்களும் தற்போது ஐடிஇயில் படிக்கவில்லை என்று அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. தாக்குதலை நடத்திய 19 வயது இளையரான பழனிதாஸ் ராமதாஸ் மீதான வழக்கு விசாரணை இன்னும் நடைபெறவில்லை.
தாக்குதலுக்கு உதவியதாகக் கூறப்படும் 18 வயது இளையர், இதனுடன் தொடர்பில்லாத வேறு குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருட்டு முயற்சியில் அவர் பங்குபெற்றார். ஜேசன் டான் என்பவரிடமிருந்து 20,000 வெள்ளி ரொக்கத்தைத் திருடும் முயற்சியில் அவரும் பங்கெடுத்தார்.
அந்தத் திருட்டு முயற்சியின்போது அவருக்கு 17 வயது என்பதால் சிறுவர்கள், இளையர் சட்டத்தின்கீழ் அவரது அடையாளத்தை வெளியிட முடியாது.
சென்ற பிப்ரவரி 15ஆம் தேதி, அந்த 18 வயது இளையரை பழனிதாஸ் தொடர்புகொண்டார். அவரது நண்பருக்கு 'பிரச்சினை' இருந்ததால் பள்ளிக்கு கத்தியை எடுத்து வரும்படி அவர் இளையரிடம் கூறினார்.
பழனிதாஸ் பின்னர் தாம் குறிவைத்த இளையரிடம், பள்ளிக் கட்டடத்தின் அடித்தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்துக்கு பேசுவதற்காக வரச்சொன்னார். அங்கு செல்லும் வழியில் தாக்குதலுக்கு உதவ, அந்த இளையர் கத்தியை பழனிதாசிடம் தந்தார். அதைப் பயன்படுத்தி, அங்கு வந்திருந்தவரை அவர் பலமுறை தாக்கினார்.
காயமுற்ற இளையர் பின்னர் சிகிச்சை நாடியபோது அவரது இடது தோள் பட்டையிலும் இடது காதிலும் காயங்கள் உறுதிசெய்யப்பட்டன.

