தமது 47 ஆண்டு வேலை வாழ்க்கையில், சாலைப் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதிசெய்ய வேண்டும் என்பதில் குறியாய் இருந்து வருபவர் 63 வயது திரு பாலகிருஷ்ணன் எஸ்.கோவிந்தராஜூ (படம்).
'பிஎஸ்ஏ சிங்கப்பூர்' நிறுவனத்துடன் கொள்கலன்களைக் கையாளும் நிபுணராகப் பணியாற்றும் இவருக்கு, தாம் கொண்ட கடப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் நேற்று விருது வழங்கப்பட்டது.
"துறைமுகத்தில் 47 ஆண்டுகள் வேலை பார்த்த எனக்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது பெருமைக்குரிய ஒன்று," என்று திரு பாலகிருஷ்ணன் கூறினார்.
விருதுக்கு இவரது பெயரை இவரின் முதலாளி முன்மொழிந்ததை அடுத்து 'சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு விருது' வழங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக தமது வேலையில் இருந்தும் அது பரிச்சயமான ஒன்று என்று சாதாரணமாக எண்ணிவிடுவதில்லை அவர்.
"கட்டுப்பாடான, பாதுகாப்பான ஓட்டுநர் என்ற கொள்கைகளை நான் இன்னமும் கடைப்பிடித்து வருகிறேன். அத்துடன் சாலையில் பொறுமையுடனும் கருணையுடனும் இருப்பேன். சாலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க இவை முக்கியமான பண்புகள்," என்றார்.
பாசிர் பாஞ்சாங் முனையத்திற்குள் மற்றும் வெவ்வேறு முனையங்களுக்குள் கொள்கலன்களை அனுப்புவது இவரின் பொறுப்பாகும்.
சிறந்த சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பதற்காக வாகனப் படைகளை இயக்கும் 11 நிறுவனங்களுக்கும் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு முதல் நிறுவனங்களுக்கும் தனிப்பட்டவர் களுக்கும் சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றம் விருது வழங்கி வருகிறது.

