தெலுக் பிளாங்கா ரைஸ் புளோக் 39இல் உள்ள அடுக்குமாடி வீட்டில் சனிக்கிழமை (ஜனவரி 29) அதிகாலையில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
அத்துடன் தீப்பிடித்த வீட்டுக்கு மேலே உள்ள வீட்டில் மாது ஒருவர் மூர்ச்சை அடைந்திருந்தார்.
அவருக்கு அதிகாரிகள் சிபிஆர் முதல் உதவி செய்தனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.
அந்த மாது சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதிகப் புகையை உள்ளிழுத்தால் பாதிக்கப்பட்ட வேறு ஒருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதிகாலை 4.40 மணி அளவில் தீச்சம்பவம் பற்றி குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் சென்றபோது, 10வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
முன்னெச்சரிக்கையாக 280 பேர் அந்த புளோக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீச்சம்பவத்துக்கான காரணத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் கிழக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை பின்நேரத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில் தெம்பனிஸ், பிடோக்கில் இரண்டு தீ விபத்துகள் நிகழ்ந்தன.
தெம்பனிஸ் அவென்யூ 5ல் உள்ள புளோக் 941ல் 10வது மாடி வீடு ஒன்று முற்றிலும் அழிந்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் அந்த வீட்டுக்குள் நுழைந்து உள்ளே நினைவற்றுக் கிடந்த ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிடோக் நார்த் ஸ்திரீட் 1ல் உள்ள புளோக் 204ல் இருக்கும் ஒரு காப்பிக்கடையில் நள்ளிரவில் மூண்ட தீயை இந்தப் படை அணைத்தது.
வீடுகளைவிட்டு வெளியேறி இருந்த பலருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

