செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
b33bacfa-cff3-42f7-b5fb-3e746342134c
-

இளையர்கள் அடுத்த தலைமுறை போதையர்களாவதைத் தடுக்க வேண்டும்

குறைவான போதைப் பித்தர்கள் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டனர். ஆனால், கைதான புதிய போதைப் புழங்கி களில் 60 விழுக்காட்டினர் 30 அல்லது அதற்குக் குறைவான வயதுடையவர்கள் என்பது சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு கவலையை அளித்துள்ளது.

இதையும் போதைப் பொருள் தொடர்பான மற்ற சவால்களையும் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிடில், அடுத்த தலைமுறை போதைப் பித்தர்களாக அதிக இளையர்கள் மாறக்கூடும் என்று எச்சரித்தார் உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம்.

"இளைஞர்கள் போதைப்பொருள் மீது அதிக தாராள மனப்பான்மையைக் கடைப்பிடிப்பது கவலைக்குரியது," என்று போதைப் புழக்கத்துக்கு எதிரான தேசிய மன்றம் 2020ல் நடத்திய ஆய்வை மேற்கோள்காட்டி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அந்த ஆய்வில், போதைப்பொருள் மீதான சிங்கப்பூரின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறைக்கு இளையர்கள் தெரிவித்த ஆதரவு 82.5%. ஒப்புநோக்க, 30 வயதுக்கு மேற்பட்டோர் தெரிவித்த ஆதரவு 88.3%.

"நமது இளைஞர்கள் அடுத்த தலைமுறை போதைப் பித்தர்களாவதற்கு முன் போதைப்பொருளுக்கு இரையாவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு அதன் மூலம் அவர்களை எட்ட வேண்டும் என்று

தி சண்டே டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த இணைப் பேராசிரியர் ஃபைசால் கூறினார்.

மீண்டும் குறைந்த கொவிட்-19

தொற்று எண்ணிக்கை

சிங்கப்பூரில் புதிதாக கொவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்தது. நேற்று முன்தினம் 12,632 பேருக்குப் புதிதாக கொவிட்-19 தொற்று பதிவானது. இதனுடன், 1,375 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

ஒப்புநோக்க, வெள்ளிக்கிழமை அன்று 15,345 தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. 1,396 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். வாராந்திர கொவிட்-19 தொற்றுப் பரவல் விகிதம் 0.89 ஆக இருந்தது. தொடர்ந்து 11வது நாளாக அந்த விகிதம் ஒன்றுக்குக் கீழ் உள்ளது. இது கிருமிப் பரவல் குறைந்து வருவதைக் காட்டுகிறது.

மேலும், 10 பேர் உயிர் இழந்ததாக நேற்று முன்தினம் சுகாதார அமைச்சு கூறியது. அத்துடன், 37 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160 பேருக்கு செயற்கை உயிர்வாயு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய சமய ஆசிரியர்கள்

80 பேருக்கு அங்கீகாரம்

ஃபிட்ரா எனப்படும் குடும்ப மற்றும் கைதிகளுக்கான பராமரிப்பு உதவித் திட்டத்தில் மேலும் ஈராண்டுகளுக்கு தொடர்ந்து சேவையாற்ற மொத்தம் 80 இஸ்லாமிய சமய ஆசிரியர்களுக்கு நேற்று நியமனக் கடிதங்கள் வழங்கப் பட்டன. இந்நிகழ்ச்சி அல்-ரவுதா பள்ளிவாசலில் நடை பெற்றது. நியமனக் கடிதங்கள் பெற்றவர்களில் 40 பேர் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

2019ல் தொடங்கப்பட்ட ஃபிட்ரா திட்டம், கைதிகள், முன்னாள் குற்றவாளிகள் ஆகியோரின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கம் கொண்டது.

நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உள்துறை துணை அமைச்சர் முஹம்மது ஃபைசால் இப்ராஹிம், கைதிகளுக்கு உதவ தங்கள் நேரத்தை அர்ப்பணித்து வரும் 80 இஸ்லாமிய சமய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கொவிட்-19 கிருமித்தொற்று நேரடிச் சந்திப்புகளைத் தடுத்தபோதும், சமய ஆலோசனைகளை சமய ஆசிரியர்கள் எவ்வாறு மெய்நிகர் வழியாக சந்திப்புகளை நடத்தினார்கள் என்பதற்கான உதாரணங்களை மேற்கோள்காட்டி, அவர்களின் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டினார்.

"மறுவாழ்வு மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைப்பு ஆகியவை நமது கைதிகளுக்கும் முன்னாள் குற்றவாளி களுக்கும் மிகவும் சிரமமான ஒரு செயல். அதில் பல சிக்கல்கள் உள்ளன.

"இருப்பினும் ஃபிட்ரா திட்டமும் அதில் உள்ள இஸ்லாமிய சமய ஆசிரியர்களும் தங்கள் பங்களிப்பைச் சிறந்த முறையில் நிறைவேற்றி வருகின்றனர்," என்றார் துணை அமைச்சர் முஹம்மது ஃபைசால்.