மின்வர்த்தக நிறுவனமான 'லசாடா', தென்கிழக்காசியாவுக்கான தனது தலைமையகத்தை அதிகாரபூர்வமாக நேற்று முன்தினம் திறந்துள்ளது. தலைமையகம் பிராஸ் பசார் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
மின்னிலக்கப் பொருளியல் தொடர்பில் பெண்களுக்கும் இளையர்களுக்கும் பாடத் திட்டங்களையும் கல்வி உபகாரச் சம்பளத்தையும் வழங்க 'லசாடா' அறநிறுவனத்தைத் தொடங்கப்போவதாகவும் அது தெரிவித்தது.
வர்த்தக, தொழில்நுட்பத் துறைகளில் உள்ளூர் திறனாளர்களை வளர்க்கத் தான் எடுக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்தப்போவதாகவும் 'லசாடா'வின் தலைமை நிர்வாகி சுன் லி கூறினார். அடுத்த 10 ஆண்டுகளையும் தாண்டி இந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடைய அவ்வாறு செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.
'லசாடா'வின் புதிய தென்கிழக்காசிய தலைமையகத்தில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திறப்பு விழாவில் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.
"நான்கில் மூன்று நிறுவனங்கள் குறைந்தது ஒரு மின்னிலக்க முறையையாவது செயல்படுத்துகின்றன. மின்னிலக்கமயமாகிப் பலனடைய நமது சிறிய, நடுத்தர நிறுவனங்களின் ஆற்றலை தொடர்ந்து மேம்படுத்தி வளரச் செய்ய நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்," என்று திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
சென்ற மாதம், 'டைசன்' நிறுவனமும் சிங்கப்பூரில் அதன் உலகளாவிய தலைமையகத்தைத் திறந்தது.

