பல்கலைக்கழகங்கள் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருவதால் அவற்றில் பயிலும் சூழல் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும் என்று மாணவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் மாணவர்கள் நேரடியாகக் கலந்துகொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மீண்டும் பெரிய அளவில் நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிதாக சேரும் மாணவர்களுக்கான அறிமுக நடவடிக்கைகள், அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்கள் உள்ளிட்டோர் இனி வாரந்தோறும் 'ஏஆர்டி' பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லை.
முன்னதாக மெய்நிகரில் நடைபெற்ற பல்வேறு நடவடிக்கைகளில் மீண்டும் கூடுதலானோர் நேரடியாகப் பங்கேற்க வகைசெய்யும் வடிவில் அவற்றை நடத்தத் தாங்கள் முயற்சிகளை எடுத்து வருவதாக சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் போன்றவற்றிலும் படிப்படியாக இயல்புநிலையைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழகத்தில் தங்கிப் பயிலும் மாணவர்கள் கிருமித்தொற்றுக்கு ஆளானால் சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கேற்ப நடந்துகொள்ளவேண்டும். இத்தகைய சில கட்டுப்பாடுகளும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றன.

