சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1,300 பேர் ஆட்குறைப்புக்கு ஆளானதாக மனிதவள அமைச்சின் முன்னுரைப்பு தெரிவித்துள்ளது.
பத்தாயிரம் ஊழியர்களில் ஆறு பேர் வேலை இழந்ததை இது குறிக்கிறது.
ஒப்புநோக்க சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்த எண்ணிக்கை 1,500 ஆக இருந்தது.
வேலைச் சந்தையில் ஊழியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டின் முதல் காலாண்டில்தான் ஆகக் குறைவான எண்ணிக்கையில் ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு ஆளாகியிருப்பதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
மறுசீரமைப்பு, மறுவடிவமைப்பு ஆகியவையே ஆட்குறைப்புக்குக் காரணம் என்று மனிதவள அமைச்சு ஆய்வு செய்த பெரும்பாலான நிறுவனங்கள் குறிப்பிட்டன.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களில் 700 பேர் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள். உற்பத்தித் துறையில் 500 பேரும் கட்டுமானத் துறையில் 100 பேரும் வேலை இழந்ததாகக் கூறப்பட்டது.
ஒப்புநோக்க 2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 9,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
கொவிட்-19 கிருமிப் பரவல் உச்சத்தில் இருந்ததால் அப்போது சிங்கப்பூரின் சேவைத் துறை மிகவும் பாதிக்கப்பட்டது.
அதன் பிறகு தொடர்ந்து ஆறாவது காலாண்டாக சேவைத் துறையில் ஆட்குறைப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை சரிந்து வருகிறது.
ஆனால் உற்பத்தி, கட்டுமானம் ஆகிய துறைகளில் சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டில் இருந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டில் உற்பத்தித் துறையில் 280 பேர் வேலை இழந்தனர். இம்முறை இந்த எண்ணிக்கை 500. கட்டுமானத் துறையில் 2021ன் நான்காம் காலாண்டில் 40 பேர் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டனர். 2022ன் முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 100க்கு உயர்ந்ததாக அமைச்சு கூறியது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான வேலைச் சந்தை அறிக்கை ஜூன் மாத மத்தியில் வெளியிடப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர்வாசிகளில் மறுவேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
மனிதவள அமைச்சு வேலைச் சந்தை முன்னுரைப்பை வெளியிட்டுள்ளது

