'கரோசெல்' என்ற இணைய வர்த்தகத் தளத்தில் பொருள்களை வாங்குவது போல் நடித்த மோசடிப் பேர்வழிகளிடம் குறைந்தபட்சம் 15 பேர் $12,000க்கும் மேற்பட்ட தொகையை இந்த மாதம் இழந்துவிட்டனர்.
பொருள்களை வாங்குவதுபோல் நடித்து 'பேநவ்' கணக்கில் பணத்தை கரோபே என்ற செயலி மூலம் வரவு வைக்கப்போவதாக மோசடிப்பேர்வழிகள் கூறுவார்கள். பிறகு அப்பாவிகளுக்கு மின்னஞ்சல் வரும். பணம் வரவு வைக்கப்பட்டுவிட்டதாக அந்த மின்னஞ்சல் கூறும்.
வங்கிக் கணக்கை பார்க்கும்படி ஓர் இணைப்பும் அந்த மின்னஞ்சலில் இருக்கும். அதைப் பயன்படுத்தும்போது தங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் ஒருநேர ரகசிய குறி எண்ணையும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை அப்பாவிகளுக்கு ஏற்படும்.
பிறகு தங்களுடைய வங்கிக் கணக்கில் அங்கீகாரமற்ற பரிவர்த்தனை நடந்து இருப்பது அப்பாவிகளுக்குத் தெரியவரும் என்று தெரிவித்த காவல்துறை எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.

