பிரதமர் லீ: ஜோகூர்-சிங்கப்பூர் இணைப்பு மேம்பட முயற்சிகள் தொடரும்

பிரதமர் லீ: ஜோகூர்-சிங்கப்பூர் இணைப்பு மேம்பட முயற்சிகள் தொடரும்

2 mins read
db8bff9b-59cb-43f3-8798-d6681e5975e4
சிங்கப்பூருக்கு வருகையளித்துள்ள ஜோகூர் சுல்தானுக்கு (இடமிருந்து இரண்டாவது) இஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங் விருந்தளித்து சிறப்பித்தார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

ஜோகூருடன் கூடிய இணைப்பை சிங்கப்பூர் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் அணுக்க ஒத்துழைப்பை நிலை நாட்டி வருவதில் ஜோகூர் மிக முக்கிய பங்காற்றுவதாகவும் திரு லீ தெரிவித்தார்.

ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹும் சுல்தான் இஸ்கந்தர், தன் துணைவியார் ராஜா சரித் சோஃபியா, பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில், அவரின் மனைவியான கலிடா, ஜோகூர் முதல்வர் ஓன் ஹனிஃப் காஸி, இதர அதிகாரிகளுடன் மூன்று நாள் வருகை மேற்கொண்டு சிங்கப்பூர் வந்திருக்கிறார்.

ஜோகூர் சுல்தான் சிங்கப்பூருக்கு மேற்கொண்டுள்ள முதலாவது அதிகாரபூர்வ பயணம் இதுவாகும். திரு லீ, நேற்று இஸ்தானாவில் ஜோகூர் சுல்தானுக்கு அதிகாரபூர்வ விருந்தளித்துச் சிறப்பித்தார்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு இப்போது எல்லை கடந்த பயணம் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தானா மேரா படகுத்துறை முனையத்துக்கும் டெசாரு கடற்கரை படகுத்துறை முனையத்துக்கும் இடையில் நேரடி படகுச் சேவை தொடங்கி இருப்பதையும் திரு லீ சுட்டினார்.

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் வேக ரயில் திட்டம் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படும் என்றும் அது செயல்பாட்டுக்கு வந்ததும் கடற்பாலத்தில் கூட்டம் குறையும் என்றும் தொழில்துறை, சுற்றுலா ஆகியவை அதிகமாகி இரு நாட்டு மக்களுக்கும் இடையில் அணுக்க உறவு பேணி வளர்க்கப்படும் என்றும் திரு லீ நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஆர்டிஎஸ் ரயில் சேவை 2027 ஜனவரியில் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் நார்த்தில் ஆர்டிஎஸ் முனையம் அமையவிருக்கும் இடத்திற்கு சுல்தான் இப்ராஹிம் புதன்கிழமையன்று (20 ஜூலை) சென்று பார்க்கத் திட்டமிடப்பட்டிருந்தது.