'பிக்சல்ஸ்' எனும் புதிய நிறுவனத்தைத் தோற்றுவித்த 45 வயது திரு டேனியல் லிம், கடந்த புதன்கிழமையன்று தனது ஜப்பானிய குடியிருப்பு அட்டையை விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டார். அங்கிருந்து அவர் நேராக 'வெல்கம் டு ஜப்பான்' எனும் புதிய திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்குச் சென்றார்.
இந்த முன்னோடித் திட்டத்துக்கு எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆதரவளிக்கிறது. திரு லிம் போன்ற தொழில்முனைவர்கள் சிரமமான ஜப்பானிய சந்தையில் வெற்றியடைய இத்திட்டம் உதவுகிறது.
"வெல்கம் டு ஜப்பான் எனும் திட்டம் சிஙகப்பூர் வர்த்தகங்கள் கால்பதிக்க விரும்பும் புதிய நிறுவனங்களுக்கு முழுமையான, நிபுணத்துவ ஆதரவளிக்கிறது," என்றார் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் ஜப்பானுக்கான வட்டார இயக்குநர் திரு ஃபேபியன் டான்.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஜப்பானில் உள்ள இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்களுடன் இணைந்து புதிய நிறுவனங்களுக்கு கட்டணக் கழிவுகளை வழங்குவதில் பணியாற்றுகிறது.
இணைந்து பணியாற்றுவதற்கு இடமளிக்கும் நிறுவனமான 'ஜஸ்ட்கோ', தோக்கியோ, ஷிபுயா, ஷின்ஜுக்கோ ஆகிய இடங்களில் நான்கு இணைந்து பணியாற்றும் அலுவலகங்களை நடத்துகிறது.
மேலும் அது வாடகை குடியிருப்பு சேவையையும் வழங்குகிறது. அதில் 600 வீடுகள் உள்ளன. அந்த எண்ணிக்கையை இவ்வாண்டு இறுதிக்குள் 1,000 ஆகவும் 2028க்குள் 10,000 ஆகவும் அதிகரிக்க 'ஜஸ்ட்கோ' திட்டமிட்டுள்ளது.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு மேலும் இரண்டு அமைப்புகளுடன் இணைந்து இலவச வர்த்தக ஆலோசனைகளை வழங்கும்.
சிங்கப்பூரின் பிக்கோ இண்டர்நேஷனல் நிறுவனம், தோக்கியோ ஒலிம்பிக்ஸ், உலக சூப்பர் நின்டெண்டோ போன்ற ஜப்பானிய திட்டங்களை யூனிவர்சல் ஸ்டூடியோஸ் ஜப்பான் கேளிக்கை வளாகத்தில் நடத்தியுள்ளது.
அத்துடன் அந்த அமைப்பு 'ஜப்பான் வே' எனும் ஜப்பானிய வர்த்தக ஆலோசனை அமைப்புடன் இணைந்து ஜப்பானிய சந்தையில் நுழைதல், வர்த்தக உத்தி போன்றவற்றில் ஆலோசனை வழங்க உதவி வருகிறது.
"ஜப்பானில் கால்பதிக்க விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் நாங்கள் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளோம்," என்று கூறிய திரு டான், புதிதாக தொழில் தொடங்க விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் சிங்கப்பூர்-ஜப்பான் இருதரப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளதால் இதில் ஆர்வமும் அதிகரித்துள்ளது," என்றார்.

