ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவனங்கள் இரண்டு, சூரியசக்தித் திட்டம் தொடர்பான ரகசிய ஒப்பந்தத்தை மீறியதாக கெப்பல் துணை நிறுவனங்கள் மீது சிவில் வழக்கு தொடுத்துள்ளன.
'கெப்பல் ரினியூவபிள் எனெர்ஜி', 'கேஆர்இ ஆங்கரேஜ்', 'கெப்பல் ரினியூவபிள் எனெர்ஜி ஆஸ்திரேலியா' ஆகியவை அந்தத் துணை நிறுவனங்கள்.
'சன்ஷைன் எனெர்ஜி ஆஸ்திரேலியா', ஆஸ்திரேலிய எரிசக்திக் குழுமம் ஆகியவை $59.3 மில்லியன் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்திருப்பதாக கெப்பல் நிறுவனம் நேற்று தெரிவித்தது.
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள 'ஹர்லின் சோலார்' நிறுவனத்தில் 45% பங்குகளை 'கேஆர்இ ஆங்கரேஜ்' நிறுவனம் வாங்கி அங்கு சூரியசக்தித் தயாரிப்பு ஆலையை நிறுவத் திட்டமிடுவதாக 2020ஆம் ஆண்டு டிசம்பரில் கெப்பல் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால் அத்திட்டம் தங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று 'சன்ஷைன் எனெர்ஜி ஆஸ்திரேலியா' நிறுவனமும் ஆஸ்திரேலிய எரிசக்திக் குழுமமும் சிவில் வழக்கில் குறிப்பிட்டுள்ளன.
குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த கெப்பல் அவற்றைத் தீவிரமாக எதிர்கொள்ளப் போவதாகக் கூறியது.
இந்த வழக்கால் குழுமத்தின் செயலாக்கம் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

