சிங்கப்பூர் நீர்ப்பகுதிகளில் 2024ஆம் ஆண்டிலிருந்து 100,000 பவளப் பாறைகள் கட்டங்கட்டமாக வளர்க்கப்படவுள்ளன. இதுவரை இல்லாத அளவில் இங்கு மேற்கொள்ளப்படவிருக்கும் பவளப் பாறை மறுசீரமைப்புப் பணி இது.
நீர்ப்பகுதியில் பல்லுயிர்ச் சூழலை வலுப்படுத்துவதும் அலைகளிலிருந்தும் புயல்களிலிருந்தும் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதுமே இதன் நோக்கம்.
குறைந்தது 10 ஆண்டுகளுக்குச் சிறிய பவளப் பாறைகள் அல்லது பவளப் பாறைத் துண்டுகள் செடி வளர்ப்புப் பண்ணையில் வளர்க்கப்படும். அவை பவளப் பாறை இருப்புகளைக் கொண்டிருக்கக்கூடிய புதிய பகுதிகளுக்கு அல்லது சேதமடைந்த கற்பாறைத் தொகுதிகளுக்கு மாற்றிவிடுவதற்கான பெரிய அளவை எட்டும்வரை அங்கு வைக்கப்பட்டிருக்கும்.
சிங்கப்பூரின் பவளப் பாறை பகுதிகளில் 60 விழுக்காடு நில மீட்பு காரணமாக அழிந்துவிட்டன. எஞ்சியுள்ள ஆரோக்கியமான பவளப் பாறை பகுதிகள் ‘சத்துமு’ தீவு, ‘செமக்காவ்’ தீவு, ‘ஹந்து’ தீவு, சிஸ்டர்ஸ் தீவுகள் போன்ற தென்தீவுகளில் பெரும்பாலும் காணப்படுகின்றன.
சிஸ்டர்ஸ் தீவுகளில் ஒன்று 2024இல் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும். வருகையாளர்களுக்கு மேலும் தகுந்த ‘பிக் சிஸ்டர்ஸ்’ தீவை அவர்கள் எதிர்பார்க்கலாம். காட்டுப் பகுதிப் பாதை, மக்கள் ‘ஸ்நோர்கல்’ செய்யக்கூடிய குளம் எனப் புதிய அம்சங்களை அங்குக் காணலாம். 40 ஹெக்டர் பரப்பளவிலான சிஸ்டர்ஸ் தீவுகள் மரின் பூங்காவின் ஒரு பகுதியான அந்தத் தீவு மேம்பாட்டுப் பணிகளுக்காக 2021ஆம் ஆண்டிலிருந்து மூடப்பட்டது.
தேசிய பூங்காக் கழகம் வழிநடத்தும் 100,000 பவளப் பாறைத் திட்டத்தையும் ‘பிக் சிஸ்டர்ஸ்’ தீவு பற்றிய தகவல்களையும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ திங்கட்கிழமையன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஐந்தாவது ஆசிய பசிபிக் பவளப் பாறைக் கருத்தரங்கில் அறிவித்தார்.
100,000 பவளப் பாறைத் திட்டத்தோடு, 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “பிளாண்ட்-எ-காரல்’, ‘சீட்-எ-ரீஃப்’ போன்ற நாட்டின் தற்போதைய பவளப் பாறை மறுசீரமைப்பு முயற்சிகள் மேலும் அதிகரிக்கும்.
‘பிக் சிஸ்டர்ஸ்’ தீவுக்குச் செல்ல விரும்புவோர், வெஸ்ட் கோஸ்ட் படகு முனையத்திலிருந்து அல்லது மரினா சவுத் படகு முனையத்திலிருந்து படகுகளை வாடகைக்கு எடுக்கலாம். இரண்டு படகுச் சேவைகளும் கிடைக்கப்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
அது தொடர்பான விவரங்கள் பின்னொரு தேதியில் வெளியிடப்படும்.