சிறைக் கைதிகள் உணவு, பானத் தொழில்துறையில் [Ϟ]வேலை பார்க்கத் தேவையான பயிற்சியைப் பெற தோதாக ஒரு புதிய செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவர்கள் வேலை பெறுவதற்கு இந்தத் திட்டம் கைகொடுக்கும்.
உள்துறை அமைச்சின்கீழ் ஆணை பெற்ற அமைப்பாக செயல்படுகின்ற மஞ்சள் நாடா சிங்கப்பூர் அமைப்பு அந்தச் செயல்திட்டத்தை 700 கைதிகளுடன் தொடங்கலாம் என்று தான் திட்டமிட்டு இருப்பதாகக் குறிப்பிட்டது.
தொழிற்சங்கங்கள், முதலாளிகளுடன் சேர்ந்து அணுக்கமாகச் செயல்பட்டு, முன்னாள் கைதிகள் வேலை பெறுவதற்கு வாய்ப்பு, வசதிகளை ஏற்படுத்தித் தரப் போவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.
எல்லா சிங்கப்பூரர்களையும் போலவே முன்னாள் கைதிகளும் தங்கள் தேர்ச்சிகளைப் பலப்படுத்திக் கொண்டு வாழ்க்கைத் தொழிலை உருவாக்கிக் கொள்ளலாம் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மஞ்சள் நாடா சிங்கப்பூர் அமைப்பின் சமையல் போட்டியின் இறுதி நாளன்று அந்தச் செயல்திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது.
அந்தச் சமையல் போட்டி சிங்கப்பூர் சமையல் கலைஞர்கள் சங்கம், ஹெச்சிஎஸ்ஏ சமையல் பயிற்சி நிலையப் பயிலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் நடந்தது.
இந்தப் பயிலகத்தைச் சேர்ந்த முன்னாள் பயிற்சியாளர்களும் கைதிகளுமாக மொத்தம் 27 பேர் அந்தப் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் தேர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
சமையல் தேர்ச்சிகளை வெளிப்படுத்துவதோடு மட்டுமன்றி அதனுடன் தொடர்புடைய வேலை செயல்திட்டங்கள் பற்றிய புரிந்துர்ணர்வை மேம்படுத்துவதும் அந்தப் போட்டியின் நோக்கமாக இருந்தது.
உணவு, சமையல் மூலம் கைதிகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவதும் அதன் நோக்கம்.
வேலையில் சிறந்து விளங்கக்கூடிய, மேம்படும் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய முன்னாள் குற்றவாளிகள் வாழ்க்கைத்தொழில் மேம்பாட்டுப் பயிற்சிப் படிப்புகளில் சேர்ந்து படித்து தகுதிகளை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக, தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் சேர்ந்து பொறுப்பாதரவு வழங்கும் இந்த வளர்ச்சி இயக்க செயல்திட்டத்திற்கு மஞ்சள் நாடா அமைப்பு $220,000 தொகையைத் தருவதாகவும் உறுதி கூறியுள்ளது.